Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை நோயை... பெருந்தொற்றாக அறிவித்த ராஜஸ்தான் அரசு
ஜெய்ப்பூர்: மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயை ராஜஸ்தான் அரசு பெருந்தொற்றாக அறிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக நாட்டை புரட்டிப் போட்ட கொரோனாவின் தீவிர தன்மை தற்போது தான் குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் என நாட்டின் சில பகுதிகளில் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இவை கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை அதிகம் குறி வைத்துத் தாக்குகிறது. குறிப்பாக நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் மட்டும் சுமார் 100 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயை ராஜஸ்தான் அரசு பெருந்தொற்றாக அறிவித்துள்ளது.
கருப்பு பூஞ்சை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கத் தேவையான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அம்மாநிலத்தின் முதன்மை சுகாதாரத் துறைச் செயலர் அகில் அரோரா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை 8398 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும், 146 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மாநிலத்தில் தற்போது வரை 7080 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications