ராமர் கோவில் விவகாரத்தை கைவிட மாட்டோம்: விசுவ ஹிந்து பரிஷத்
ஜெய்ப்பூர்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தைக் கைவிட மாட்டோம் என்று விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்துள்ளது.
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான விநாயக் ராவ் தேஷ் பாண்டே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமர் கோவில் விவகாரத்தை எங்கள் அமைப்பு கைவிட்டு விடவில்லை. அந்த விவகாரத்தை நாங்கள் கைவிட்டு விடவும் மாட்டோம்.
அயோத்தி ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக எங்கள் அமைப்பு தற்போதைக்கு அமைதியான நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறது. அயோத்தியில் உள்ள தாற்காலிக ராமர் கோவில் நல்ல நிலையில் உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, அயோத்தியில் நிரந்தரமாக ராமர் கோவில் கட்டப்படும்.
அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், உயர் நீதிமன்றம் ஹிந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக விவாதிப்பதற்காக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை, ராம உற்சவக் கொண்டாட்டத்துக்கு விசுவ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கொண்டாட்டத்தின்போது, ராமர் கோவில் விவகாரத்தை எங்கள் அமைப்பு எழுப்பும். முஸ்லிம் அல்லாத இளம்பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதலித்து திருமணம் செய்து, தங்களது மதத்துக்கு மாற்றம் செய்யும் விவகாரத்துக்கு எதிராக பாஜக விழிப்புணர்வுப் பிரசாரம் செய்து வருவது வரவேற்கத்தக்கது.
இதுகுறித்து விசுவ ஹிந்து பரிஷத் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரத்தால் 10,000 இளம்பெண்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், ஹிந்து இளைஞர்களை மறுமணம் செய்து கொண்டு விட்டனர்.
இவ்வாறு ராவ்தேஷ் பாண்டே கூறினார்.












Click it and Unblock the Notifications