ராப் பாடகர் மீது பாலியல் புகார்.. ‘வேடனுக்கு’ வலை விரித்த கேரள போலீஸ்! இவரா இப்படி? உச்சகட்ட அதிர்ச்சி!
திருவனந்தபுரம்: சமீபகாலமாக சமூக வலைதளங்களில் இளைஞர்களின் ஆதரவை பெற்ற பிரபல ராப் பாடகர் வேடன் என்ற ஹிரந்தாஸ் முரளிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண் மருத்துவர் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லலாம் என்ற தகவலின் அடிப்படையில் லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் இளைஞர்களால் அதிகம் தேடப்பட்ட நபர் வேடன். ஹிரந்தாஸ் முரளி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தனியாக ராப் ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார். வாய்ஸ் ஆப் தி வாய்ஸ்லெஸ் என்ற முதல் இசை ஆல்பமே யூடிபில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
சாதி மத அடக்குமுறைக்கு எதிராக தீப்பொறி போல இடம்பெற்று இருந்த பாடல் வரிகள் சமூக வலைதளங்களில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல்வேறு பாடல்களை வெளியிட்டு வந்த அவர் ரீல்ஸ்களில் அதிகமாக இடம் பெற்றார்.

தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ஜோஜூ ஜார்ஜ், குஞ்சாகோ போபன் நடித்த நாயாட்டு என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிலும் அறிமுகமானார். தொடர்ந்து 'நோ வே அவுட்' திரைப்படத்தில் 'மரணத்தின் நிறம்' அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. இதற்கிடையே மலையாள மட்டுமல்லாது தமிழிலும் பெரும் வெற்றி பெற்ற 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' படத்தில் இடம்பெற்ற 'குத்தந்திரம்' பாடல் இவருக்கு பெரும் முகவரியை தந்தது.
தொடர்ந்து நரி வேட்டை படத்திலும் வாடா வேடா பாடலை பாடி இருந்தார். இப்படி புரட்சிகர பாடல்கள் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமான வேடன் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவதும் வழக்கம் தான். கடந்த 2021 ஆம் ஆண்டு முதன்முறையாக அவர் மீது பாலியல் புகார் முன்வைக்கப்பட்ட நிலையில் உண்மையில் தான் அவ்வாறு செய்ததாகவும் அதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறி இருந்தார். கடத்த ஏப்ரல் மாதம் கஞ்சா வைத்திருந்த புகாரில் கைது செய்யப்பட்ட வேடன் பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
அது மட்டுமல்லாது சிறுத்தை புலியின் பல் பொருத்தப்பட்ட செயின் அணிந்திருந்ததாக வனத்துறை அதிகாரிகளாலும் கைது கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்து மதம் குறித்தும் பிரதமர் குறித்தும் அவமதிப்பதாக இவர் மீது பாஜகவினர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதே நேரத்தில் அவருக்கான ரசிகர் பட்டாளமும் அதிகரித்தது. செல்லும் இடமெல்லாம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து அவருக்கு ஆதரவு கொடுத்தனர்.
இந்த நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் வேடன். கடந்த மாதம் பெண் மருத்துவர் ஒருவர் அவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு வைத்தார். வேடனின் பாடல்களுக்கு ரசிகையாக இருந்த அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து அவரை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகவும், பல நேரம் பணம் பெற்ற நிலையில் தன்னை ஏமாற்றி விட்டதாக அந்த பெண் புகார் அளித்திருந்தார்.
புகார் தொடர்பாக திரிஹரக்கா போலீசார் நம்பிக்கை மோசடி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் வேடனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்காமல் இருக்க அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் கிடைத்ததாகவும், இதை அடுத்து இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வேடனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications