ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி ஏன் வைக்க கூடாது? ட்விஸ்ட் வைத்து பேசிய பரூக் அப்துல்லா
ஸ்ரீநகர்: பாஜகவை வீழ்த்துவதற்காக மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு தயார் என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தொங்கு சட்டசபை அமைந்தால் மெகபூபா முப்தியுடன் இணைந்து ஆட்சியை பிடிக்கவும் இந்தியா கூட்டணி வியூகம் வகுப்பதாக தெரிகிறது.
ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை அங்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

அதன் பிறகு அங்கு முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று இருப்பதால் நாளை வெளியாகக் கூடிய ரிசல்ட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாஜக மற்றும் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி தனித்தனியே போட்டியிட்டன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளன. தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் 4-12 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளி வந்துள்ளன.
இதன்படி முடிவுகள் அமைந்தால், மெகபூபா முப்தி கட்சி கிங்மேக்கராக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. இதனால், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை மெகபூபா முப்தி கட்சியுடன் தேசிய மாநாட்டு கட்சி அமைக்குமா? என்ற பேச்சு தற்போதே அடிபட தொடங்கிவிட்டது. இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த பரூக் அப்துல்லா, "ஏன் இல்லை" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "நாங்கள் அனைவரும் ஒரே விஷயத்திற்காக பணியாற்றுகிறோம். மாநில மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறோம். தேர்தலில் போட்டியாளராக இருக்கலாம். ஆனால், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்காது என உறுதியாக சொல்கிறேன்" என்றார். அதே நேரத்தில் முதல்வர் பதவியையும் கோரப்போவது இல்லை என்று தெரிவித்துள்ள பரூக் அப்துல்லா, "வலுவான அரசை அமைப்பதுதான் என்னுடைய தற்போதய பிரச்சினையாக உள்ளது.
சுயேட்சைகளிடம் ஆதரவு கேக்கவும் நான் தயங்க மாட்டேன். அதெவேளையில் அவர்களிடம் போய் பிச்சை எடுக்க போவது இல்லை. மாநிலத்தை வலுப்படுத்த நினைத்தால் அவர்கள் வரலாம்" என்றார். ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கு முன்பாக மக்கள் ஜனநாயக கட்சியிடமும் தேசிய மாநாட்டு கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தியா கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி நடைபெற்றது.
எனினும், சீட் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால், மெகபூபா முப்தி தனித்து போட்டியிட்டார். நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதுதெரிந்து விடும். அதே வேளையில், கருத்துக்கணிப்புகளின் படி அமைந்தால், தொங்கு சட்ட சபை ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது மெகபூபா முப்தி ஆதரவு அவசியம் தேவைப்படும் என்பதால் பரூக் அப்துல்லாவின் இன்றைய பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications