வெளிநாட்டு பணம்: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ 3.29 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி
திருப்பதி: வெளிநாட்டு பணம் தொடர்பான விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரிசர்வ் வங்கி ரூ 3.29 கோடி அபராதம் விதித்துள்ளது.
திருமலை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இவரை தரிசனம் செய்ய வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகிறார்கள்.
அது போல் பிரம்மோற்சவம், புத்தாண்டு, கோடை விடுமுறை, சொர்க்க வாசல் திறப்பு போன்றவற்றின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அது போல் பெருமாளின் உண்டியல் வருமானமும் தினமும் கோடிக்கணக்கில் வரும்.

நகைகளின் மதிப்பு
பெருமாளுக்கு இருக்கும் நகைகளின் மதிப்பும் கணக்கில்லாதவை. அவருடைய சொத்து மதிப்பும் அதிகமாகும். தினந்தோறும் பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய வாசனை திரவியங்கள், வாசனை வஸ்துகள், பூ உள்ளிட்டவை பல்வேறு ஊர்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. வரவிற்கேற்ப திருப்பதியில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

3 வேளை
தர்ம தரிசனம் பார்க்கும் பக்தர்களுக்கு 3 வேளையும் சுடச்சுட உணவு, பால், ஸ்னாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அது போல் சுவாமி தரிசனம் முடிந்தாலும் முடியாவிட்டாலும் கோயில் அருகே உள்ள அன்னதான கூடத்தில் சுடச்சுட உணவு பரிமாறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சுவாமி பார்த்துவிட்டு வெளியே வரும் போது கவுன்ட்டரில் சிறிய வகை லட்டு, புளியஞ்சாதம், வெண்பொங்கல், தயிர்சாதம் உள்ளிட்ட மகா பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

குறைந்த வாடகை
தங்குவதற்கு குறைந்த வாடகையில் தங்கும் அறைகள் கிடைக்கின்றன. கோயிலின் வரவு செலவு கணக்குகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கவனித்து வருகிறது. தேவஸ்தானம் உள்பட அறக்கட்டளைகள் தங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்கு முன் அந்த பணத்தை யார், எப்படி , எப்போது வழங்கினர் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

உரிய விளக்கம்
உரிய விளக்கங்களை பெற்றுக் கொண்ட பின்னரே வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நிறுவனம் அல்லது அறக்கட்டளை தனக்கு கிடைத்த வெளிநாட்டு பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து இந்திய பணமாக மாற்றி கொள்ளலாம். ஆனால் திருப்பதி ஏழுமலையானுக்கு வெளிநாட்டு பணத்தை காணிக்கையாக செலுத்தும் பக்தர்கள் பற்றிய விவரத்தை தேவஸ்தானத்தால் கண்டுபிடிக்க இயலாது.

பக்தர்கள்
குறிப்பிட்டு யாரையும் குறிப்பிட இயலாத பக்தர்கள் மூலம் ஏழுமலையானுக்கு இந்த பணம் காணிக்கையாக கிடைத்தது என்று தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளித்தது. இந்த விளக்கத்தை சட்டரீதியாக ஏற்க இயலாத காரணத்தால் கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டம் மூலம் தேவஸ்தானத்திற்கு கிடைத்த வெளிநாட்டு பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய தேவையான அனுமதியை 3 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.

தேவஸ்தான விளக்கம்
இந்த நிலையில் சரியாக விளக்கம் அளிக்காத காரணத்தால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ 3.29 கோடி ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. தேவஸ்தானத்திடம் தற்போது ரூ 30 கோடி இந்திய மதிப்பிலான வெளிநாட்டு பணம் குவிந்துள்ளது. இந்த அபராதம் குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறுகையில் ரிசர்வ் வங்கியுடன் பேசி இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications