ரூ. 20,000 கோடி சொத்து; 500 ஏக்கரில் வீடு? உலகை மிரட்டும் இந்தியப் பணக்கார கிரிக்கெட் வீரர்!
குஜராத்: விராட் கோலி, எம்.எஸ். தோனியைவிட உலகையே மிரட்டும் பணக்கார கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர் எப்படி இந்தளவுக்குச் செல்வந்தராக மாறினார்?
இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர்கள் யாருக்கு இருக்கிறார்கள் என்று கேட்டால் உடனே சட்டென்று பலரும் தோனியின் பெயரைச் சொல்லிவிடுவார்கள். அதேபோல பணக்கார கிரிக்கெட் வீரர் யார் என்றால், சிலர் சச்சின் என்றோ அல்லது விரார் கோலி, தோனி என்றோ சொல்வார்கள். இதுதான் உண்மையா என்றால் கொஞ்சம் சந்தேகம்தான் அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர்களின் பட்டியலில் வேண்டுமானால் இந்த இருவருக்கும் இடம் கிடைக்கும். நிச்சயம் பணக்கார வீரர் பட்டியலில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை.

அப்படி என்றால் யார் பணக்கார வீரர்? இதற்கு விடை கண்டுபிடிக்க வெறும் கிரிக்கெட் ரசிகராக இருந்தால் போதாது, கொஞ்சம் பழைய காலத்து வீரர்கள் பற்றியும் விசயம் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதுதான் உண்மை.
இன்றைக்கு கிரிக்கெட் வீரர்களில் பலர் ஆரம்பக் காலங்களில் பரம ஏழையாக இருந்தவர்கள்தான். ஒருசிலர் பிறவியிலேயே பணக்காரர்களாக இருந்திருக்கலாம். பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் விளையாடி பணம் சேர்த்ததைவிட விளம்பரத்தின் மூலம் பல கோடிகளைச் சம்பாதித்தவர்கள்தான் அதிகம். அதுதான் யதார்த்தம்.
அதிகபட்சமாக பிசிசி ஒரு வீரருக்கு 7 அல்லது 8 கோடி சம்பளமாக தருகிறது. அதை ஒரே விளம்பரத்தில் 2 நிமிடங்கள் தலைகாட்டுவதன் மூலம் தோனியோ கோலியோ சம்பாதித்துவிடுவார்கள். ஆனால், இந்தப் புகழுக்கு அடித்தளம் கிரிக்கெட் புகழ்தான். அதை மறுக்கவே முடியாது.
ஆனால், நாம் சொல்லும் பணக்கார கிரிக்கெட் வீரர் விளம்பரங்களில் பணம் சேர்த்தவர் இல்லை. பிசிசி கொடுத்த சம்பளத்தால் பணக்காரர் ஆனவர் அல்ல. அவர் ஒரு பிறவி செல்வந்தர். அவர் பெயர் சமர்ஜித்சின் ரஞ்சித்சிங் கெய்க்வாட். என்ன கெய்க்வாட் என்றது சிலருக்கு ஒருவரை ஞாபகம் வந்திருக்கவேண்டுமே? நம்ம சூப்பர் ஸ்டார் கூட கெய்வாட்தான். இவர் சிவாஜி ராவ் கெய்க்வாட்.
இந்த சமர்ஜித்சின் ரஞ்சித்சிங் கெய்க்வாட்டை குறைவான நபர்களுக்குத்தான் தெரிந்திருக்கும். இவர் இந்தியாவிலுள்ள பெரும் பணக்காரர் மட்டுமல்ல; உலகளவிலுள்ள பிரபலமான எந்த கிரிக்கெட் வீரரையும் விடப் பணக்காரர்.இவர் ஒரு அரச குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், சமர்ஜித்சிங் அதிகம் விரும்பியது பணத்தை அல்ல. கிரிக்கெட் விளையாட்டைத்தான். அதன் மீது அவருக்கு அவ்வளவு மோகம். இவர் தனது கிரிக்கெட் அகாடமி மூலம் விளையாட்டுத்துறைக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். இவரைப் பற்றிய கதை சுவாரஸ்யங்கள் மிக்கது.
ஏப்ரல் 1967 இல் பிறந்த சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட் இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் என்று அடையாளம் காணப்படுகிறார். அவர் ரஞ்சித்சிங் பிரதாப்சிங் கெய்க்வாட், சுபாங்கினிராஜே ஆகியோரின் ஒரே மகன். சமர்ஜித்சிங் கெய்க்வாட் புகழ்பெற்ற டூன் பள்ளியில் படித்தார். அங்கு அவர் கால்பந்து, டென்னிஸ், கிரிக்கெட் அணிகளை இளமையிலேயே வழிநடத்தினார். அதனால் விளையாட்டு மீது இவருக்குக் காதல் பிறந்தது.
இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்: முன்னாள் கிரிக்கெட் வீரரான சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட், சுமார் 20,000 கோடிக்கும் மேலாக சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார் என டிஎன்ஏ இந்தியா செய்திபடி தெரியவருகிறது. பிசினஸ் இன்சைடர் தகவலின் படி, எம்எஸ் தோனியின் சொத்துக்களின் நிகர மதிப்பு ரூ. 926 கோடி தான். சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு ரூ. 1400 கோடி.
ஆனால், சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட் இவர்களுக்கு எல்லாம் மேல். தந்தையின் மரணத்திற்குப் பிறகு, இவர் பரோடாவின் மகாராஜாவானார். உலகின் மிகப்பெரிய தனியார் ஆடம்பர பங்களா என்று சொல்லக்கூடிய புகழ்பெற்ற லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் வளர்ந்தார். இவர் பரோடா, பனாரஸில் ஆகிய நகரங்களில் உள்ள 17 பிரபலமான பாரம்பரிய கோயில்களின் அறக்கட்டளைகள் இவரது கட்டுப்பாட்டில்தான் உள்ளன. இன்றும் அவற்றை இவர் நிர்வகித்து வருகிறார்.

விளையாட்டு மீதான காதல்: சமர்ஜித்சிங் குஜராத்தில் உள்ள வான்கனேர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ரதிகராஜே கெய்க்வாட்டை மணந்தார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தக் குடும்பம் 500 ஏக்கர் பரப்பளவிலுள்ள ஆடம்பரமான லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில்தான் வசித்து வருகிறது. இது பக்கிங்ஹாம் அரண்மனையை விட பெரியது.
சமர்ஜித்சிங் ரஞ்சி டிராபியில் பரோடா அணிக்காக கிரிக்கெட் விளையாடி உள்ளார். 1987 முதல் 1989 வரை முதல்தர பேட்ஸ்மேனாக விளையாடினார். பின்னர் கிரிக்கெட் நிர்வாகியானார். பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். இப்போது அவரே கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறார்.
தவிர, இவருக்கு கோல்ஃப் மீது ஆர்வம் உண்டு. லக்ஷ்மி விலாஸ் அரண்மனை வளாகத்தில் 10 துளைகள் கொண்ட கோல்ஃப் மைதானம் உள்ளது. கிளப்ஹவுஸ் ஒன்றையும் வைத்துள்ளார். 2014 நவம்பரில் சமர்ஜித்சிங் பாஜகவில் இணைந்தார். ஆனால், 2017க்குப் பின் தீவிர அரசியலில் ஈடுபடுவதை நிறுத்திக் கொண்டார்.
கெய்க்வாட் வம்ச வரலாறு: பரோடாவில் கெய்க்வாட் ஆட்சி 1721 இல் மராட்டிய தளபதி பிலாஜி ராவ் கெய்க்வாட் முகலாயப் பேரரசிலிருந்து நகரத்தைக் கைப்பற்றியது முதல் தொடங்கியது. மராட்டியப் பேரரசின் முதலாம் சத்ரபதி ஷாஹு பிலாஜியின் குடும்பத்திற்கு பரோடாவை ஜாகிர் (ஒரு வகை நில மானியம்) வெகுமதியாக அது வழங்கப்பட்டது.
1761 இல் நடந்த பானிபட் போரில் மராத்தியர்கள் தோல்வி அடைந்த பிறகு, கெய்க்வாட்கள் உட்படப் பல மராத்தியக் குலங்கள் கிட்டத்தட்டச் சுதந்திர ஆட்சியாளர்களாக மாறினர். 1802 ஆம் ஆண்டில், பரோடா மகாராஜாக்கள் ஆங்கிலேயர்களுடன் காம்பே உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். அது பிரிட்டிஷ் ஆட்சியை ஒப்புக்கொண்டு உள்நாட்டில் ஆட்சி செய்ய அனுமதித்தது. இந்த ஏற்பாடு 1947 இல் இந்தியா சுதந்திரம் கிடைக்கும் வரை நீடித்தது.












Click it and Unblock the Notifications