‛‛உதவியாளரிடம் சிக்கிய ரூ.37 கோடி’’.. ஜார்கண்ட் காங்கிரஸ் அமைச்சர் கைது.. அமலாக்கத்துறை அதிரடி
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆலம்கீர் ஆலம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.37 கோடி சிக்கிய நிலையில் ஆலம்கீர் ஆலமை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
ஜார்கண்ட்டில் கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தி வருகின்றன. இங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்தார். சுரங்க முறைகேடு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து புதிய முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சம்பாய் சோரன் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இவரது அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் ஆலம்கீர் ஆலம் அமைச்சராக உள்ளார். இவர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் ஆலம்கீர் ஆலம் ஊரக மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை விசாரிக்க தொடங்கியது.கடந்த 7 ம் தேதி அமலாக்கத்துறை சார்பில் ஆலம்கீர் ஆலமின் உதவியாளர் சஞ்சீவ் லால் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின்போது கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. மொத்தம் ரூ.36.75 கோடி ரொக்கப்பணம் சிக்கியது. இதுபற்றி விசாரித்தபோது சஞ்சீவ் லால் சரியாக பதில் அளிக்கவில்லை. மேலும் பணத்துக்கான ஆவணத்தையும் காட்டவில்லை. இதையடுத்து சஞ்சீவ் லால் மற்றும் அவரது பணியாளர் ஜஹாங்கீர் ஆலம் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்தனர். இவர்களிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.
அதன்பிறகு அமைச்சர் ஆலம்கீர் ஆலமை விசாரணைக்கு அழைத்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இன்று ஆலம்கீர் ஆலம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 7 மணிநேரம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவர் கூறிய விஷயங்களை அமலாக்கத்துறை பதிவு செய்தனர். அதன்பிறகு இன்று மாலை 6.30 மணிக்கு அமலாக்கத்துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலமை அதிரடியாக கைது செய்தது.
ஏற்கனவே ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் சுரங்க முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தற்போது அமைச்சர் ஆலம்கீர் ஆலம் ஊரக மேம்பாட்டு திட்ட முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஜார்கண்ட் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications