மணிப்பூர் சென்றார் பிரதமர் மோடி.. 2023 வன்முறைக்கு பின் முதல்முறை பயணம்.. ரூ.8,500 கோடியில் கிப்ட்
இம்பால்: மணிப்பூரில் குக்கி - மைத்தேயி மக்களிடையே கடந்த 2023ம் ஆண்டில் மோதல் ஏற்பட்டு வன்முறை நடந்தது. இந்த வன்முறை ஓராண்டுக்கு மோலாக தொடர்ந்த நிலையில் தற்போது அமைதி நிலவி வருகிறது. மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் வன்முறைக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூர் சென்று ரூ.8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக பைரன் சிங் இருந்தார். இதற்கிடையே தான் கடந்த 202ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி சமுதாய மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையானது. மாநிலமே பற்றி எரிந்தது. 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டனர். மேலும் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினர்.

இந்த வன்முறையில் ஏராளமானவர்கள் பலியானார்கள். 250க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். பலரும் வீடுகளை இழந்தனர். இதையடுத்து பைரன் சிங்கின் ஆட்சி கலைக்கப்பட்டது. தற்போது ஜனாதிபதி ஆட்சி மணிப்பூரில் நடந்து வருகிறது. மணிப்பூரில் ஓராண்டுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்து வந்த நிலையில் தற்போது அமைதி நிலவி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க பிரதமர் மோடி மணிப்பூர் செல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்களை அவர் சந்திக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இந்நிலையில் தான் வன்முறைக்கு பிறகு பிரதமர் மோடி இன்று முதல் முறையாக மணிப்பூர் செல்ல உள்ளார். பிரதமர் மோடி இன்று முதல் வரும் 3 நாட்கள் வரை மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு சென்று பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கிறார்.
அதன்படி அசாம் பயணத்தை முடித்த பிரதமர் மோடி இன்று மணிப்பூர் சென்றார். மணிப்பூர் வன்முறைக்கு பிறகு அவர் முதல் முறையாக அங்கு சென்றார். மணிப்பூரில் மொத்தம் ரூ.8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அவர் தொடங்கி வைத்தார். முதலில் சுரசந்த்பூரில் ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சிறுவர், சிறுமிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் பிரதமர் மோடிக்கு மணிப்பூரில் பாரம்பரிய தொப்பி, ஓவியம் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினர்.
அதன்பிறகு தலைநகர் இம்பாலில் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்து மக்களிடம் உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மணிப்பூரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி சென்ற சுரசந்த்பூரில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. மோடியை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த அலங்கார வளைவு மற்றும் பேனர்களை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்தனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. மோடியின் வருகையையொட்டி மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications