கார் விபத்து வழக்கில் சல்மான்கானின் விடுதலையை எதிர்த்து அப்பீல்.. மகாராஷ்டிர பாஜக அரசு அறிவிப்பு
மும்பை: கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான் கானின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக மகாராஷ்டிர பாஜக அரசு அறிவித்திருக்கிறது.
2002 ம் ஆண்டு நடிகர் சல்மான் கான் கார் ஏற்றி ஒருவரைக் கொன்ற வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, கடந்த 10 ம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
இந்த வழக்கில் சல்மான் கானுக்கு எதிராக அரசு தரப்பிலும், மனுதாரர் தரப்பிலும் சமர்ப்பிக்கபட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. முக்கிய சாட்சியான சல்மான்கானின் பாதுகாவலரின் வாக்குமூலம் முற்றிலும் நம்பகமானதாக இல்லை.

சல்மான்கான் தான் காரை ஓட்டினார் என்பதோ, அவர் மது போதையில் இருந்தார் என்பதோ சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை.
ஆதாரங்கள் போதுமானதாக இல்லாததால் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை விடுவிப்பதுடன், மும்பை செசன்சு நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்கிறோம்.
என்று இந்த வழக்கின் தீர்ப்பை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி வழங்கினார். இது நாடு முழுவதும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சல்மான் கானின் விடுதலையை எதிர்த்து மும்பை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக மகாராஷ்டிர பாஜக அரசு தெரிவித்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்தத் தகவலை தெரிவித்த மகாராஷ்டிர அரசு வரும் ஜனவரி முதல் வாரத்தில் இந்த வழக்கில் மனுத்தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications