சொத்துக் குவிப்பு வழக்கு: காளான் வளர்த்த சசிகலா; ஜெயலலிதாவுக்கு ரூ.1.5 கோடி கடன் கொடுத்தார்!!!!
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பில் இறுதிவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த வாதத்தின் பொழுது சில சுவாரஸ்ய சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. நான் அவனில்லை என்ற ரீதியில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர் எடுத்து வைக்கும் வாதத்தை நீதிபதி கூர்ந்து கவனிப்பதோடு இடை இடையே கேள்விகளும் கேட்டு வழக்கறிஞரை அசரடிக்கிறார்.
சசிகலாவுக்கு 1991-96 காலகட்டத்தில் 30 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. அவர் ஜெயலலிதாவிடமிருந்து பணம் பெறவில்லை. சசிகலாதான் ஜெயலலிதாவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கடனாக கொடுத்துள்ளார் என்று வழக்கறிஞர் மணிசங்கர் வாதிட்டதை சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளவர்கள் ஆர்வத்துடன் கவனித்தனர்.
சசிகலாவின் வருமானத்தில் இருந்து அப்போது ''இளவரசிக்கு 45 லட்சமும், சுதாகரனுக்கு 16 லட்சமும் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளது...'' என வழக்கறிஞர் மணிசங்கர் ஆணித்தரமாக தெரிவித்தார்.

பங்குதாரர் மட்டுமே
என் மனுதாரர் சசிகலா பங்குதாரராக இருந்த பல நிறுவனங்களை வழக்கில் இணைத்துள்ளார்கள். சசிகலாவுக்குச் சொந்தமான கட்டிடங்கள், வீடுகள், அலுவலகங்கள், நீலாங்கரை பங்களா, பையனூர் பங்களா, சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், தியாகராயநகரில் உள்ள வணிகக் கட்டிடங்கள் ஆகியவற்றையும் வழக்கில் இணைத்துள்ளார்கள்.

மிகைப்படுத்தப்பட்ட கணக்கு
இந்தக் கட்டிடங்கள் சில, வழக்கு காலகட்டத்துக்கு முன்பும், சில கட்டிடங்கள் வழக்கு காலகட்டத்திலும் கட்டப்பட்டவை. அந்தக் கட்டடங்களின் மதிப்பீட்டை தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் நியமிக்கப்பட்ட பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மிகைப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.

செலவு தொகையும் சேர்ப்பு
வழக்கு காலகட்டத்துக்குப் பிறகு ஆறு மாதங்கள் கழித்தே மதிப்பீடு செய்துள்ளதால் இடைப்பட்ட ஆறு மாதங்களில் கட்டடப் பணிக்கு செலவு செய்த தொகையும் இந்த வழக்கில் காட்டப்பட்டுள்ளது. அந்தத் தொகைகளை இந்த வழக்கில் இருந்து நீக்க வேண்டும்.

மராமத்து செலவு
சசி என்டர்பிரைசஸுக்குச் சொந்தமான சென்னை கிண்டியில் உள்ள இன்டஸ்டிரியல் எஸ்டேட் மராமத்து வேலைகள் செய்ததில், ரூபாய் 14,17,538 செலவு செய்துள்ளதாகப் பொதுப்பணித் துறை அதிகாரி கோவிந்தன் மதிப்பீடு செய்துள்ளார். ஆனால், அதற்கு ஆன செலவு 4,76,525 மட்டும்தான்.

பென்ஸ் கார் வாங்கிய செலவு
அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வாங்கிய பஜாஜ் டெம்போ விலை ரூபாய் 2,03,979. ஜெயா பப்ளிகேஷன் வாங்கிய பென்ஸ் கார் விலை ரூபாய் 9,15,000. இவை வழக்கு காலகட்டத்துக்கு முன்பு வாங்கியவை. ஆனால், வழக்கு காலகட்டத்தில் வாங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சசிகலாவின் நகைகள்
சசிகலாவுக்குச் சொந்தமான 31.3.1991-ல் வாங்கப்பட்ட 62 தங்க நகைகளின் மதிப்பு 9,38,460 எனவும், 16.1.92-ல் வாங்கிய 34 தங்க நகைகளின் மதிப்பு 17,54,868 எனவும் பொதுப்பணித் துறை அதிகாரி ஸ்ரீஹரி குறிப்பிட்டுள்ளார். இந்த நகைகள் அனைத்தும் வழக்கு காலகட்டத்துக்கு முன்பே வாங்கப்பட்டவை. இதை வருமான வரித்துறையில் காட்டி அதற்கு வரியும் கட்டியிருக்கிறோம்.

லீசுக்கு எடுத்த மெஷின்கள்
என் மனுதாரர்கள் பங்குதாரர்களாக உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் நிறுவனத்துக்காக வாங்கிய 50-க்கும் மேற்பட்ட மெஷினரிகள் மதிப்பை 84,21,000 எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த இயந்திரங்களைப் பெரும்பாலும் லீஸுக்கு எடுத்திருந்தோம். அதை எல்லாம் இதில் காட்டவில்லை.

காமெடியாக இருக்கிறது
இதையெல்லாம் பார்க்கும்போது கல்லூரி பருவத்தில் படித்த ஒரு காமெடிதான் நினைவுக்கு வருகிறது என்று சொல்லிவிட்டு வழக்கறிஞர் மணிசங்கர், ''பிரெஞ்சு படத்துக்கு, ஜெர்மன் மொழியில் எழுதி, ஸ்வீடன் பாடகரிடம் பாடக் கொடுத்து, இத்தாலி மொழியில் மொழிபெயர்த்து, ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காக அரங்கேற்றப்பட்ட பாடலைப்போல, தமிழக ஊழல் தடுப்பு போலீசாரின் கீழ் செயல்பட்ட பொதுப்பணித் துறை பொறியாளர்கள் என் மனுதாரர் சசிகலாவின் சொத்து மதிப்பைக் கணக்கீடு செய்திருக்கிறார்கள்'' என்று கூறிவிட்டு சசிகலாவுக்கு வந்த வருமானத்தை அடுக்கினார்.

சசிகலாவின் வருமானம்
''சசிகலா, வழக்கு காலகட்டத்துக்கு முன்பே பல தொழில் நிறுவனங்கள் தொடங்கி, அதன் மூலம் பல லட்சம் வருமானத்தை ஈட்டியதோடு, பல நிறுவனங்களில் பங்குதாரராக இருந்து அதன் மூலமும் வருமானம் பெற்றிருக்கிறார்.

கட்டிட வாடகை
1992-93-ல் தொழில் நிறுவனங்கள் மூலமும் விவசாயம் மற்றும் கட்டிட வாடகை மூலமும் கிடைத்த ஆண்டு வருமானம் ரூபாய் 4,41,615. அதே காலகட்டத்தில் என் மனுதாரர் சசிகலாவுக்கு வெளிநாட்டில் இருந்து பரிசாக வந்த தொகை ரூ.51,47,955. இந்தத் தொகை அன்பளிப்பாக வந்ததால், அதற்கு வருமான வரி கட்ட வேண்டியது இல்லை. இப்படி ஒவ்வொரு ஆண்டும் என் மனுதாரருக்கு கிடைத்த வருவாய்களை தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் கோர்ட்டில் காட்டாமல் மறைத்துவிட்டனர்.

காளன் பயிரிட்ட சசிகலா
சசிகலா தன் விவசாய நிலத்தில் காளான் பயிரிட்டதில் கிடைத்த வருமானத்தையும் கணக்கில் காட்டாமல் மறைத்துவிட்டனர். 1989 முதல் 1990-ம் ஆண்டில் ராமச்சந்திரனுக்கு 5,96,000 ரூபாயும், சுப்ரமணிக்கு 2,25,000 ரூபாயும், நாகம்மாளுக்கு 8,70,000 ரூபாயும் கடன் கொடுத்திருந்தார். அதை 1991 முதல் 1992 வரை அவர்கள் சசிகலாவிடம் திரும்பக் கொடுத்தார்கள். அதையெல்லாம் கணக்கில் காட்டாமல் மறைத்திருக்கிறார்கள்.

சாதகமான ஆவணங்கள்
தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் வீட்டில் ஆய்வு செய்து அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றினார்கள். அதில் அவர்களுக்கு சாதகமாக இருந்த ஆவணங்களை மட்டுமே நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்கள். எங்களுக்கு ஆதரவாக இருந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் மறைத்துவிட்டனர்.

ரூ.30 கோடி வருமானம்
சசிகலாவுக்கு வழக்கு காலகட்டமான ஐந்து ஆண்டுகளில் கிடைத்த மொத்த வருமானம் 30,30,22,575. இதில் இருந்து என் மனுதாரர் சசிகலா, ஜெயலலிதாவுக்கு ஒரு கோடியே 50 லட்சம் கடனாக வழங்கினார்.

தொழில் தொடங்க கடன்
சுதாகரன் தொழில் தொடங்கவும் இளவரசி தொழில் தொடங்கவும் சசிகலா கடன் கொடுத்தார்'' என்று விரிவாகச் சொன்னார் வழக்கறிஞர் மணிசங்கர். அப்போது நீதிமன்றம் சிறிது நேரம் நிசப்தமானது.

வியாபாரக்கடன்
"அது என்ன கடன்?' எனக்கேட்டு நிசப்தத்தைக் கலைத்தார் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா. "வியாபாரக் கடன்' என்ற வழக்கறிஞரிடம் அதை விளக்குமாறு நீதிபதி கேட்க,
"சசி எண்டர்பிரை சஸ் உள்ளிட்ட நிறுவனங் களில் கிடைத்த லாபத்தி லிருந்து ஜெயலலிதாவுக்கு எனது கட்சிக்காரர் (சசிகலா) கடன் கொடுத்தார்' என்றார் மணிசங்கர்.

பங்குதாரருக்குக் கடன்
அதற்கு நீதிபதி, ""சசி எண்டர் பிரைசஸ் நிறுவனத்தில் ஜெயலலிதா, சசிகலா இருவரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இதில் கிடைக்கும் லாபத்தை இருவரும் பங்கிட்டுக் கொள்ளாமல் ஒரு பங்குதாரரான சசிகலா எப்படி மற்றொரு பங்கு தாரருக்கு கடன் கொடுக்க முடியும்?'' எனக் கேட்டார்.
இது தொடர்பான கணக்குகளை ஏற்கனவே வருமான வரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்திருப்பதாக மணிசங்கர் சொல்ல, அது தொடர்பான ஆவணங்களை நீதிபதி கேட்டார். அவற்றைக் கொடுத்த மணிசங்கர் அன்றைய தினம் தனது வாதத்தை முடித்துக்கொண்டார்.

மாமனார் மரணம்
நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் மாமனார் செவ்வாய்கிழமை இரவு காலமானதால் மூன்று நாட்கள் அவர் விடுப்பு எடுத்திருந்தார். சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை தினம் முடிந்த பின்னர் திங்களன்று வாதம் தொடங்கியது.

சுதாகரன், இளவரசி
சொத்துக்குவிப்பு வழக்கில் 3, 4-ம் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அமித் தேசாய் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சுதாகரன், இளவரசி பெயரில் சொத்து குவித்துள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளனர் என்றார்.

ஆதாரமில்லை
மேலும் சுதாகரனும் இளவரசியும் ஜெயலலிதாவுடன் இணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டு, சொத்து குவித்ததாகவும் கூறியுள்ளனர். இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு.
இது தொடர்பாக அவர்கள் தரப்பில் எவ்வித ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே இவ்வழக்கில் கூட்டுச்சதி திட்டத்தின் கீழ் சுதகாரணையும் இளவரசியையும் சட்டத்தால் தண்டிக்க முடியாது என பல வழக்குகளை உதாரணம் காட்டி வாதிட்டார்.

புதிய மனு
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா,சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பாக புதிய மனு ஒன்று திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிக்கை மொழிபெயர்ப்பு
அதில், "தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், 1997-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப் பத்திரிக்கையை தமிழில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டபோது குற்றப் பத்திரிக்கை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது. அப்போது சில தவறுகள் ஏற்பட்டுள்ளன.

திருத்தம் செய்யவேண்டும்
எனவே, எங்கள் சார்பில் ஓய்வு பெற்ற மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி தியாகராஜன் மூலமாக குற்றப் பத்திரிக்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறோம். இதை கருத்தில்கொண்டு திருத்தம் செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இம்மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு உத்தரவிட்டார்.

தீர்ப்பை எதிர்நோக்கி
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால் தினமும் விசாரித்து, விரைவில் தீர்ப்பை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் பல முறை வலியுறுத்தியுள்ளது. நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா, இவ்வழக்குக்கு நீண்ட விடுமுறை எதுவும் அளிக்காமல் வாரத்தின் 5 நாட்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்.

17 ஆண்டுகால வழக்கு
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்துவிட்டது. சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு வாதங்களும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எந்த வித தடங்களும் இன்றி குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு இறுதி வாதம் முடிவடையும் நிலையில் 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications