உணர்ச்சி வசப்பட்டு விட்டேன்... திருச்சி சிவாவிடம் மன்னிப்பு கேட்டார் சசிகலா புஷ்பா!
டெல்லி: உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொண்டேனே தவிர அதில் உள்நோக்கம் ஏதும் இல்லை. அப்படி நடந்து கொண்டதற்காக திருச்சி சிவா மற்றும் திமுக தலைவரிடம் நான் மன்னிப்பும், வருத்தமும் கேட்டுக் கொள்கிறேன் என்று சிவாவின் கன்னத்தில் அறைந்த சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று திமுக எம்பி திருச்சி சிவாவும், அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவும் சொந்த ஊர் திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாய்தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆவேசமடைந்த சசிகால புஷ்பா, திருச்சி சிவாவின் கன்னத்தில் 4 முறை அறைந்ததாகவும் செய்திகள் வெளியானது.
திருச்சி சிவாவை, சசிகலா புஷ்பா கன்னத்தில் நான்கு முறை அறைந்துள்ளார். மேலும், கன்னத்தில் அறைந்ததை சசிகலா புஷ்பா ஒப்புக் கொண்டார். தொடர்ந்து, தமிழகம் திரும்பியதும் போயஸ்கார்டன் சென்ற அவர், ஜெயலலிதாவை சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளித்தார்.
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமலேயே சென்றார். இதனிடையே, கட்சி மேலிடம் சசிகலா புஷ்பாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாகவும் கார்டன் வட்டாரங்கள் தெரிவித்தன.
|
ராஜ்யசபாவில் பேச்சு
இதனிடையே இன்று ராஜ்யசபா கூடியது காலை 11 மணியளவில் சசிகலா புஷ்பா பேசினார். அப்போது அவர், டெல்லி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பற்றி கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றன. அவ்வாறு நடந்த சம்பவத்திற்காக நான் வருத்தப்படுகிறேன்.

மன்னிப்பு கேட்கிறேன்
உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொண்டேனே தவிர அதில் உள்நோக்கம் ஏதும் இல்லை. அப்படி நடந்து கொண்டதற்காக திருச்சி சிவா மற்றும் திமுக தலைவரிடம் நான் மன்னிப்பும், வருத்தமும் கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணீர் விட்டு கதறல்
பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாததால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார். சசிகலா புஷ்பா கண்ணீர் விட்டு அழுதார். உடன், எம்.பி. என்ற முறையில் அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என ராஜ்யசபா துணை சபாநாயகர் பி.ஜெ குரியன் தெரிவித்தார்.

உயிருக்கு அச்சுறுத்தல்
தொடர்ந்து பேசிய சசிகலா புஷ்பா, தமது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் பாதுகாப்பு இல்லாததால் தமக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் கதறினார். ராஜ்யசபாவில் ஜெயலலிதாவை பேசிய சசிகலா புஷ்பாவிற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

உறுப்பினர்கள் அமளி
யாரிடம் இருந்தாவது உங்களுக்கு மிரட்டல் இருக்கிறதா? என்று துணை சபாநாயகர் குரியன் கேட்டார். அதற்கு சசிகலா புஷ்பா,
எனது புகாரில் தனிப்பட்ட பிரச்னை ஏதும் இல்லை என்று கூறினார். இதற்கிடையில் சசிகலா புஷ்பாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களும் அதிமுக உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்யசபாவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications