அரசு தரப்பு வழக்கறிஞர்களை தபால்காரர்கள் போல பயன்படுத்துவதா?: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு
டெல்லி: அவதூறு வழக்குகளில் அரசு தரப்பு வழக்கறிஞர்களை தபால்காரர்கள் போல பயன்படுத்துவதா? என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி.. தற்போதும் சரி அவதூறு வழக்குகள் அணிவகுத்து நிற்கின்றன. திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், முரசொலி நாளேடு, ஜூனியர் விகடன் குழும இதழ்கள், நக்கீரன் ஆகியவற்றின் மீது முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் சார்பில் ஏராளமான அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

கடும் விமர்சனம்
"தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அவதூறு வழக்குகள் அதிகமாக தொடரப்படுகின்றன? அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வதுதான் எதிர்கட்சிகள் பணி; இப்படி விமர்சனம் செய்வதற்கு எல்லாம் அவதூறு வழக்குகள் தொடர்வதா?

அரசு இயந்திரம் இயங்கலையே..
அரசு எந்திரம் சரியாக இயங்காததாலேயே விமர்சனங்கள் எழுகின்றன என கடுமையாக நீதிபதிகள் கூறியிருந்தனர். அத்துடன் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைகளுக்கும் உச்சநீதிமன்றம் தடையை நீட்டித்திருந்தது. இந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போதும் தமிழக அரசுக்கு எதிரான கருத்துகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.

தபால்காரர் மாதிரி நடத்துவதா?
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், இது தொடர்பாக விளக்கம் அளித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் தனி மனிதர்களின் பேச்சு சுதந்திரத்தைத் தடுக்கும் வகையில் அவதூறு வழக்கு தொடர்வது அதிருப்தியை தருகிறது; அரசு தரப்பு வழக்கறிஞர்களை தபால்காரர்கள் போல் தமிழக அரசு நடத்த கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அவதூறு என்றால் என்ன?
மேலும் அவதூறு வழக்கின் விதிமுறைகள் என்ன ? என்றும் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழக அரசு வழக்கறிஞருக்கும் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications