கர்நாடக சட்டசபை தீர்மானத்தை தூக்கி குப்பையில் போட்ட சுப்ரீம் கோர்ட்.. பரிசீலிக்க கூட மறுப்பு!
டெல்லி: காவிரியில் செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இத்தீர்ப்பை செயல்படுத்த இயலாது என கூறி, இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவையில் கடந்த 23ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் லலித் அமர்வு முன்னிலையில், விசாரணைக்கு, வந்தபோது, இந்த தீர்மானம் குறித்து தமிழகம் சார்பில் ஆஜரான சேகர் நாப்தே, கேள்வி எழுப்பினார். கர்நாடகா மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். கர்நாடகாவில் குடிக்க நீர் இல்லை என்பதால் சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல்படுத்த முடியவில்லை என்று கர்நாடக தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதிட்டார்.

ஆனால், சுப்ரீம்கோர்ட், கர்நாடக சட்டசபை தீர்மானம் உச்சநீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது. உச்சநீதிமன்ற உத்தரவை அரசுகள் மதித்தே நடக்க வேண்டும். நீதிமன்ற மாண்பை சீர் குலைக்க கூடாது. கூட்டாட்சி தத்துவம் கொண்ட இந்தியாவில், எந்த ஒரு மாநிலமும், சுப்ரீம்கோர்ட் உத்தரவை மதிக்காமல் இருக்க முடியாது. மற்றொரு மாநிலத்திற்கு எதிராக சண்டையிட சுப்ரீம்கோர்ட்டை பயன்படுத்தக்கூடாது என்றனர்.எனவே அடுத்த இரு நாட்களுக்கு மொத்தம் 12 ஆயிரம் கன அடிநீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
கர்நாடக தரப்பு வக்கீல் நாரிமன் குறுக்கிட்டு, சட்டசபை தீர்மானத்தை எதிர்த்து, மாநில அரசால் அணை தண்ணீரை திறக்க முடியாது. இதில் சிக்கல் உள்ளது என்றார். ஆனால் இதை கருத்தில் கொள்ளவில்லை சுப்ரீம்கோர்ட். கீழ்ப்படியாமல் இருப்பது கூட்டாட்சி தத்துவத்தில் எந்த தீர்வையும் தராது என்று கர்நாடகாவுக்கு குட்டு வைத்தனர்.
கர்நாடக சட்டசபையின் தீர்மானத்தை கிஞ்சித்தும் பரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் தயாரில்லை என்பதோடு, தீர்மானத்திற்கு எதிராக மேலும் 2 நாட்களுக்கு தலா 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கவும் உத்தரவிட்டுள்ளது சுப்ரீம்கோர்ட். எனவே கர்நாடக அரசின் தீர்மானம் வெறும் சம்பிரதாயமாக மாறிப்போய்விட்டது.












Click it and Unblock the Notifications