"கருத்து கந்தசாமிகளுக்கு" விடிவு காலம் பிறக்க செய்த ஷ்ரேயா சிங்கால்… யாருன்னு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஷ்ரேயா சிங்கால்... என்ற இளம் யுவதியை இன்றைக்கு சமூகவலைத்தளவாசிகள் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன. காரணம் இவர் செய்த செயல் அப்படி. சமூகவலைத்தளவாசிகளுக்கு மிகப்பெரிய நிம்மதியை பெற்றுத்தந்திருக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் பொதுவான ஒரு கருத்து சொன்னதற்காக ஜெயிலுக்கு அனுப்பி வைத்தனர் அரசியல்வாதிகள். ஆனால் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் விமர்சனங்கள், கருத்துகளை குற்றமாகக் கருதும் தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு 66ஏ சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினைக் கூறி, அதை ரத்து செய்து வலைஞர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியையும், விடுதலையையும் அளித்துள்ளது

கடந்த 2012-ஆம் ஆண்டில் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைவின்போது மும்பை முடங்கியது. இதுகுறித்து பேஸ் புக்கில் கருத்து தெரிவித்த பெண்ணும், அதை ஆமோதித்த அவரது தோழியும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் ஷ்ரேயா சிங்கால் மனதை பாதித்தது. இதுவே வழக்குத் தொடர காரணமாக அமைந்தது.

இணையதள கருத்து சுதந்திரத்துக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், சாதகமான தீர்ப்பைப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார் ஷ்ரேயா. இவர் வழக்கறிஞர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தாய் உச்சநீதிமன்ற வழக்கறிஞர். பாட்டி நீதிபதியாக இருந்தவர்.

Section 66(A) Scrapped: Meet Shreya Singhal, Petitioner Who Fought for Net Freedom

இணையதள சுதந்திரம்

இந்த வெற்றி குறித்து கருத்து கூறியுள்ள ஷ்ரேயா, அப்போது நான் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண் டிருந்தேன். இணையதள கருத்துத் சுதந்திரத்தை மீட்க உறுதிபூண்டேன். 66 ஏ பிரிவு மத்திய, மாநில அரசுகளால் தவறாக பயன்படுத்தப்படுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை.

கருத்து சுதந்திரம்

எனவே மக்களுக்காக நானே களம் இறங்க முடிவு செய்தேன். நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இப்போது மிகப்பெரிய வெற்றிகிடைத்துள்ளது. மக்களின் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

10 கைது சம்பவங்கள்

சமூக வலைத்தள சுதந்திரத்துக்கு தடை விதித்த 66 ஏ சட்டப்பிரிவு இதுவரை 10 சம்பவங்களில் தவறாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தையும் ஊழலையும் விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் அசிம் திரிவேதி கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து பல்வேறு சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பினர்.

இளம் பெண்கள் கைது

2012 நவம்பர் 17-ஆம் தேதி பால்தாக்கரே மும்பையில் காலமானார். அவரது மறைவினை அடுத்து மும்பை நகரம் முடங்கியது. இது தொடர்பாக ஷாஹீன்ததா என்ற இளம்பெண், "பால்தாக்கரே மரணத்தால் மும்பை முடங்கியதற்கு அச்சமே காரணம், அவர் மீதான மரியாதை அல்ல'' என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்தை அவரது தோழி ரேணு சீனிவாசன் பேஸ்புக்கில் ஆமோதித்தார்.

இதுதொடர்பாக சிவசேனா அளித்த புகாரின்பேரில் இருவரும் கைது செய்யப் பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

அம்பிகேஷ் மகாபத்ரா, சுபத்ரா சென்குப்தா

2012-ம் ஆண்டில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து ஜவாத்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் மகாபத்ராவும் அவரது நண்பர் சுபத்ராவும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கார்ட்டூனுக்காக கைது செய்யப் பட்டனர்.

ரவி சீனிவாசன்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை விமர்சித்து புதுச்சேரியை சேர்ந்த ரவி சீனிவாசன் 2012ஆம் ஆண்டில் ட்விட்டரில் கருத்துகளை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது 66 ஏ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மயாங்க் சர்மா, கே.வி. ராவ்

ஏர் இந்தியா ஊழியர்கள் மயாங்க் சர்மா, கே.வி. ராவ் உள்ளிட்டோர் அரசியல்வாதிகள் குறித்து பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துகளைத் தொடர்ந்து அவர்கள் மீது 66 ஏ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

எழுத்தாளர் கன்வால் பார்தி

கடந்த 2013 ஆகஸ்ட்டில் உத்தரப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து எழுத்தாளர் கன்வால் பார்தி பேஸ்புக்கில் கருத்துகளை பதிவு செய்தார். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

தேவு சோதன்கர்

கோவா மாநிலத்தைச் சேர்ந்த தேவு சோதன்கர், பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துக்காக கைது செய்யப்பட்டார்.

மாணவர்கள் கைது

கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் ஆட்சேபகரமான கருத்து களை வெளியிட்டதால் அவர் கைது செய்யப்பட்டார். இதேபோல உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர், அந்த மாநில அமைச்சர் ஆசம் கானுக்கு எதிராக அண்மையில் பேஸ்புக்கில் கருத்துகளை பதிவு செய்தார். இதுதொடர்பாக அந்த மாணவர் கைது செய்யப்பட்டார். இவர்கள் அனைவர் மீதும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் இளைஞர்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோரி சர்மா, பன்சிலால், மோதிலால் சர்மா ஆகியோர் ஃபேஸ்புக்கில் ஆட்சேபகரமான வீடியோவை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.

வழக்கறிஞர் பாரம்பரியம்

டெல்லியில் பள்ளிப்படிப்பை முடித்த ஷ்ரேயா, பின்னர் பிரிட்டன் சென்று 7 பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆஸ்ட்ரோபிசிக்ஸ் பயின்றார். அங்கு படிப்பை முடித்துக்கொண்டு 2012ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். இந்தியாவில் சட்டம் பயிலும் எண்ணத்தில் இருந்தார் ஷ்ரேயா. ஆனால் சமூக வலைத்தளத்தில் கருத்திட்டதற்காக கைது செய்யப்பட்ட பல சம்பவங்கள் ஷ்ரேயாவை கொதிப்படைய வைத்தன.

66 ஏ சட்டப்பிரிவு

66 ஏ சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்துவதால் ஆவேசம் அடைந்தவர், இது தொடர்பாக தனது அம்மாவுடன் சூடாக விவாதித்துக்கொண்டிருந்தார். அப்போது அம்மா, அவரிடம் இதற்காக நீயே ஏன் பொதுநல மனு தாக்கல் செய்யக்கூடாது என கேட்டிருக்கிறார். இதனையடுத்து வழக்கறிஞர் உதவியுடன் ஷ்ரேயா இதற்கான மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தான் உச்சநீதிமன்றம் 66ஏ பிரிவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

உரிமை காப்பாற்றப்பட்டது

சிறைக்கு செல்லும் அச்சத்தில் யாரும் தாங்கள் சொல்ல விரும்புவதை சொல்லாமல் இருக்கக் கூடாது, நீதிமன்றம் மக்களின் உரிமையை காப்பாற்றி இருக்கிறது என்று கூறியுள்ளார் ஷ்ரேயா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+