Operation Bluestar: 1984-ல் 554 சீக்கிய தீவிரவாதிகளை ஒரே இடத்தில் கொன்று குவித்த இந்திரா காந்தி!
அமிர்தசரஸ்: இந்தியாவில் பயங்கரவாதத்துக்கு எதிராக 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கை மூலம் ஒரே இடத்தில் 554 சீக்கியர் பிரிவினைவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அந்த இயக்கத்தின் தலைவர் பிந்தரன்வாலேவின் கதையை மட்டுமல்ல காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு கோரும் இயக்கத்தின் கதையையே முடிவுக்கு கொண்டு வந்தார் இந்திரா காந்தி.
இந்தியாவில் சீக்கியர்கள் வசிக்கும் பஞ்சாப் உள்ளிட்ட மாநில பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு பெறுவதற்கான ஆயுதப் போராட்டத்துக்கு தலைமை வகித்தவர் பிந்தரன்வாலே. அப்போதைய இந்திய அரசுக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தது பிந்தரன்வாலேவின் காலிஸ்தான் விடுதலை இயக்கம்.

சீக்கியர்களின் புனித வழிபாட்டுத் தலமான அமிர்தசரஸ் பொற்கோவில்தான் பிந்தரன்வாலே உள்ளிட்டவர்களின் புகலிடமாக இருந்தது. பிந்தரன்வாலே மற்றும் அவரது இயக்கத்தினரை ஒழித்துக் கட்ட 1984-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் ஜூன் 10-ந் தேதி வரை இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கையின் பெயர்தான் ஆபரேஷன் ப்ளூஸ்டார். மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்புவதற்கு முதலில் ஒருவித தயக்கம் மத்திய அரசிடம் இருந்தது. பின்னர் சீக்கியர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களும் அமிர்தசரஸ் பொற்கோவில் ரத்த வெள்ளத்தில் மிதந்தது. ஆபரேஷன் ப்ளூஸ்டார் முடிவுக்கு வந்த போது ஒட்டுமொத்த சீக்கிய பிரிவினைவாதிகளும் அதே புனித வழிபாட்டுத் தலத்துக்குள் கொன்று குவிக்கப்பட்டனர்- பிந்தரன்வாலேவும் அதில் அடக்கம்!

சீக்கியர்களின் மனதில் இந்த ஆபரேஷன் ப்ளூஸ்டார் மிகப் பெரும் காயத்தை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த சீக்கியர்களும் இந்த ராணுவ நடவடிக்கைக்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருந்தனர். இதன் உச்சமாகத்தான் சில மாதங்களிலேயே சீக்கியர் பாதுகாவலர்களால் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்திரா காந்தியை படுகொலை செய்த பயங்கரவாதிகள் இன்றளவும் மாவீரர்களாக பஞ்சாப் மண் போற்றுகிறது.
அதேநேரத்தில் இந்திரா படுகொலைக்கு பழிதீர்க்கும் வகையில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சீக்கியர்கள் மீது மிகப் பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. 3,000க்கும் அதிகமான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; தீக்கிரையாக்கப்பட்டனர். இந்த சீக்கியர் படுகொலை தொடர்பான வழக்குகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் முதல் வாரம் சீக்கியர்களால் துயரம் தோய்ந்த மனதுடன் நினைவுகூரப்படுகிறது ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் எனும் ரத்த சரித்திரம்!












Click it and Unblock the Notifications