வைட்டமின் டானிக்கிற்கு பதிலாக பினாயில் கொடுத்த நர்ஸ்.. 11 மாத குழந்தை உயிரிழப்பு.. குஜராத்தில் ஷாக்
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 11 மாத கைக்குழந்தை உயிரிழந்துள்ளது. வைட்டமின் டானிக் கொடுப்பதற்கு பதிலாக பினாயிலை நர்ஸ் தவறுதலாக கொடுத்ததால் குழந்தை உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ளது அகமதாபாத். அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் அகமதாபாத்தில் பல்வேறு தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் உள்ளன. அகமதாபாத்தில் ஷர்தாபென் அரசு மருத்துவமனை உள்ளது. குஜராத் மாநகராட்சியால் நடத்தப்படும் இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகை தருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ஷர்தாபென் மருத்துவமனைக்கு 11 மாத கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் வந்தார். தனது குழந்தைக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் காய்ச்சல் மற்றும் வாந்தி ஆகிய உடல் நல பாதிப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மருந்து மாத்திரைகளை எழுதி கொடுத்தனர். வைட்டமின் டானிக்கையும் மருத்துவர்கள் மருந்து சீட்டில் எழுதி கொடுத்துள்ளனர்.
மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வழக்கமான பரிசோதனைக்கு பிறகு கடந்த திங்கள் கிழமை குழந்தைக்கு கொடுப்பதற்காக வைட்டமின் டானிக்கை மருத்துவர் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் நர்சும் வைட்டமின் டானிக் என ஒரு பாட்டிலை கொடுத்து இருக்கிறார்.
தினமும் மூன்று வேளைக்கு 5 மில்லி கொடுக்க வேண்டும் என சொல்லி கொடுத்துள்ளார். குழந்தையின் அம்மாவும் நர்சு கூறியபடி டானிக்கை திறந்து 5 மில்லி கொடுத்துள்ளார். குடித்த மறுநிமிடமே குழந்தையின் வாயில் இருந்து நுரையாக வந்துள்ளது. சற்று நேரத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் தாய், டானிக்கை முகர்ந்து பார்த்த போது பினாயில் வாடை வந்துள்ளது.
இதையடுத்து, சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். தற்போது தடயவியல் பரிசோதனைக்கு மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சி அடைந்துள்ளது. குழந்தைக்கு டானிக் மருந்துக்கு பதிலாக பினாயில் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், தற்போது விசரணை நடைபெற்று வருகிறது.
இதில் ஏதேனும் முறைகேடுகள், அலட்சியம் நடைபெற்று இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அகமதாபாத் மாநகராட்சியால் நடத்தப்படும் ஷர்தாபென் மருத்துவமனை ஏற்கனவே பல முறை இது போன்ற சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அம்ரைவாடி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை இன்புளுயன்சா காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் தனது மனைவி உயிரிழந்து விட்டதாகவும் புகார் அளித்து இருந்தார்.
இதேபோல், கடந்த 2020 ஆம் ஆண்டு கடுமையான காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்கு வந்த நோயாளி ஒருவரை தவறுதலாக கொரோனா வார்டில் அனுமதித்தது அப்போதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications