கலவரக்காரர்களை “கண்டவுடன் சுட உத்தரவு”.. மணிப்பூரில் தணியாத பதற்றம்.. ஆளுநர் அதிரடி!
இம்பால் : மணிப்பூரில் இரு பிரிவினர் இடையேயான மோதலால் கலவரம் நீடித்து வரும் நிலையில், அசாதாரண சூழலில் வன்முறையை கட்டுப்படுத்த, கலவரக்காரர்களை கண்டவுடன் சுட அம்மாநில ஆளுநர் அனுஷியா உய்கே உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தற்போது பாஜக தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. அங்கு பிரேன் சிங் முதலமைச்சராக உள்ளார். மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை சமூகமான மெய்தி சமூகத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக இருந்து வந்த மோதல், நேற்று திடீரென வன்முறையாக உருவெடுத்தது. பழங்குடி ஒற்றுமை நடைபயணம் நேற்று நடைபெற்றதை அடுத்தே, மோதல் அதிகரித்தது.

பெரும்பான்மை சமூகமான மெய்தி சமூகத்தவரை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் பேரணி நடத்தியது. அதேசமயம், இவர்களுக்கு எதிராக சில பகுதிகளில் எதிர்தரப்பினரும் தங்களது பேரணியை நடத்தினர். இதில், சவ்ரசந்திரபூர் எனும் இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு கலவரமாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கலவரம் நடந்த இடத்தில் கண்ணீர் புகைக்குண்டு வீசி மக்களை கலைத்து நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நேற்றிரவு மணிப்பூரின் சில இடங்களில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும், இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவற்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு பரபரப்பான மற்றும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கலவரம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதால் மணிப்பூரில் குறிப்பிட்ட எட்டு மாவட்டங்களுக்கு இந்திய இராணுவம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகளும் முடக்கப்பட்டன. கலவரத்தின் காரணமாக அங்கு ஐந்து நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க ராணுவத்தினர் களமிறக்கப்பட்டு சுமார் பத்தாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பையும் ராணுவத்தினர் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் கலவரம் நீடித்து வருவதால் அசாதாரண சூழலில் வன்முறையை கட்டுப்படுத்த, கலவரக்காரர்களை கண்டவுடன் சுட அம்மாநில ஆளுநர் அனுஷியா உய்கே உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications