காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்: சித்தராமையா
பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மூலம் தீர்க்காமல், காவிரி பிரச்னையை ஜெயலலிதா வேண்டுமென்றே உச்ச நீதிமன்றத்தையும், பிரதமரையும் அணுகுகிறார் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா கூறியதாவது:
''காவிரி பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால், அதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒப்புக்கொள்ள மாட்டார். அவர் வேண்டுமென்றே உச்ச நீதிமன்றம், பிரதமரை அவ்வப்போது அணுகி பல்வேறு கோரிக்கைகளை வைத்த வண்ணம் உள்ளார்.
உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை என்று கருத்து தெரிவித்தப்போதும் ஜெயலலிதா அதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு செலுத்தியுள்ள மேல் முறையீட்டு மனுவால் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டி போட்டுக் கொண்டு பிரதமருக்கு கடிதம் எழுதிய வண்ணம் உள்ளனர். ஆனாலும், எந்த காரணத்திற்காகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
இதுவரை, காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி தண்ணீர் விட வேண்டியிருந்தது. ஆனால் 260 டி.எம்.சி தண்ணீரை வழங்கியுள்ளோம்.
கர்நாடகத்தில் மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளதால் காவிரியில் தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது. மற்றபடி மழை வந்தால் அவர்களுக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை வழங்குவதில் எந்தவித தயக்கமும் இல்லை.
கர்நாடகத்தில் கே.ஆர்.எஸ்.ஸில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை உள்ளதால், அங்குள்ள தண்ணீர் கர்நாடக விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஆனால், அணையில் தேக்கப்படும் தண்ணீர் கர்நாடகத்தைவிட, தமிழகத்திற்குத்தான் அதிக அளவில் பயன்படுகிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றும் சித்தராமைய்யா கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications