மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்... கர்நாடக முதல்வர் சித்தராமையா நம்பிக்கை
பெங்களூரு : மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

மாநகராட்சி தேர்தல் தானே என்று வாக்காளர்கள் ஆர்வம் காட்டாததால், வாக்குப்பதிவு 40 % என்ற அளவிலேயே பதிவானதாக கூறப்படுகிறது. இத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 25ம் தேதி, செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது...
பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது உறுதி. மாநகராட்சியில் பா.ஜனதா நிர்வாகம் இருந்தபோது பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. நாங்கள் நிர்வாகத்திற்கு வந்த பிறகு அந்த தவறுகளை சரி செய்வோம். அதனால் வாக்காளர்கள் எங்கள் கட்சியை தான் ஆதரிப்பார்கள்.
முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கும்படி கட்சி மேலிடம் எனக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதனால் மாநகராட்சி தேர்தல் முடிந்த பிறகு மாநில தலைமையை மாற்றுவதாக வெளியாகும் தகவல் வெறும் வதந்தி ஆகும். ஆகவே நாங்கள் வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Click it and Unblock the Notifications
