டெல்லியில் குடிபோதையில் துணை எஸ்.ஐ., கான்ஸ்டபிள் மீது டாக்சியை ஏற்றிக் கொன்ற டிரைவர்
டெல்லி: டெல்லியில் சோதனைச் சாவடியில் வேகமாக வந்த டாக்சி டிரைவர் 2 போலீசாரை வாகனத்தை ஏற்றிக் கொன்றார். மேலும் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள கலிந்தி கஞ்ச் பகுதியில் போலீசார் இன்று அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டாக்சியை போலீசார் நிறுத்துமாறு கை காண்பித்தனர். ஆனால் டிரைவரோ வேகத்தை அதிகரித்து சென்றார். அப்போது 3 போலீசார் வாகனத்தை நிறுத்த முயன்றனர்.

வேகமாக சென்ற டாக்சி போலீசார் மீது மோதிச் சென்றது. அதில் 2 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியான போலீசாரின் உடல்கள் டாக்சியில் 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர் பிற போலீசார் பாய்ந்து அந்த டாக்சியை நிறுத்தி டிரைவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட டிரைவர் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஹேம்ந்த் என்பதும், அவர் ஈக்கோ காரை ஓட்டியதும் தெரிய வந்தது. சம்பவம் நடந்தபோது ஹேமந்த் குடிபோதையில் இருந்துள்ளார்.
பலியானவர்கள் ஜெய்ட்பூர் காவல் நிலைய துணை எஸ்.ஐ. நாகேந்தர் மற்றும் கான்ஸ்டபிள் பிரஹலாத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் தலைமை ஏட்டு காப்தான் ஆகும்.
இந்த சம்பவத்தால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications