குஜராத்தில் ராமர் ஊர்வலத்தில் கல் வீச்சு.. 15 பேர் கைது.. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த போலீஸ்
அகமதாபாத்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு குஜராத்தில் நடைபெற்ற ராமர் ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, ராமர் கோவில் கட்டுமான பணிகளை கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கட்டுமான பணிகள் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை மேற்பார்வையில் நடந்து வந்தது.

உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் கோவில் கட்டுமான பணிகள் நடந்தது. நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்டமாக உள்ளது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களை கொண்டுள்ளது.
கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த பிரமாண்ட கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை உள்ளிட்டவை 22 ஆம் தேதி திங்கட்கிழமை பகல் 12.20 மணிக்கு நடக்கிறது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட யாகசாலையில் அந்த கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. 121 ஆச்சாரியார்கள் இந்த பூஜைகள் மற்றும் யாகங்களை நடத்தி வருகிறார்கள்.
சிலை பிரதிஷ்டையில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் ஊர்வலங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் குஜராத்தின் மெஹஸ்னா மாவட்டத்தில் ஊர்வலம் ( "sobha yatra) நடைபெற்று வந்தது. இதில் ஏரளாமனவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
அப்போது கெராலு டவுன் அருகே வந்த போது ஊர்வலத்தின் மீது சிலர் கற்களை வீசி தாக்கியதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசினர். இதனால், அங்கு சிறிது நேரத்தில் நிலமை கட்டுக்குள் வந்தது.
கற்கள் வீசப்பட்டது தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கைதானவர்களிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராமர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் கற்கள் வீசப்பட்ட சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications