எல்லாம் பொய்.. கும்பமேளாவை அரசியலாக்குவதை நிறுத்துங்க.. சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகராஜ் கண்டனம்
கும்பமேளாவை வைத்து அரசியல் கூடாது என அவ்தேஷானந்த் கிரி மகராஜ் கேட்டு கொண்டுள்ளார்
கான்பூர்: "கும்பமேளா விழாவை அரசியலாக்குவதை நிறுத்துங்க.. நம் நாட்டின் கலாச்சாரமும், பாரம்பரியமும், நம்பிக்கையும், பூஜைகளும் திட்டமிட்டே களங்கப்படுத்தப்படுகின்றன.. கும்பமேளாவை அரசியலாக்குவது நல்லதல்ல" என்று ஆச்சார்யா மகாமண்டலேஸ்வரின் ஜூனா அஹாரா சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகராஜ் வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த முறை கும்பமேளா நிகழ்ச்சி மிகுந்த கலக்கத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.. வழக்கமாக கும்பமேளாவில் பல லட்சக்கணக்கானோர் ஒன்றாக கூடி, ஒரே நேரத்தில், கங்கையில் நீராடுவார்கள்..
ஆனால் தொற்று வேகமாக பரவி வருகிறது என்று தெரிந்தும், 2வது அலை முதல் அலையைவிட மிக பயங்கரமானது என்று தெரிந்தும், ஆஸ்பத்திரிகளில் மக்கள் சிகிச்சை பெறுவதற்கு பெட்கள் பற்றாக்குறையாக இருக்கிறது என்பது தெரிந்தும்கூட, ஹரித்வார் நகரில் பக்தர்கள் குவிந்து வருவது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏப்ரல் முழுவதும் 70 லட்சம் பக்தர்கள் நீராடி இருக்கிறார்கள்.

விதிகள்
மாநில அரசு திணறிவிட்டது.. 3 மாத நிகழ்ச்சிகள், 2 மாதமாக குறைக்கப்பட்டும், கட்டுப்பாடுகள் போடப்பட்டும் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை.. ஒருத்தரும் விதிகளை கடைப்பிடிக்கவுமில்லை. இறுதியில், நிர்வாண சாதுக்களின் அமைப்பான மகாநிர்வாணி அகாடாவின் தலைவர் கபில் தேவ் தாஸ் தொற்றுக்கு பலியானபிறகுதான் லேசான அச்சம் பக்தர்களிடம் எட்டிப்பார்த்தது. பிறகு ஒவ்வொருவராக ஊர் வந்து சேர்வதற்குள் தொற்று ஏராளமாக பரவிவிட்டது.

காங்கிரஸ்
இதற்கு காங்கிரஸ் கட்சி விமர்சிக்க ஆரம்பித்தது. ஆனால் பாஜகவோ, ''நம் பிரதமர் மோடியின் மரியாதையைக் குலைக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. கும்பமேளா திருவிழா, தடுப்பூசி பற்றாக்குறை, கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து பிரச்சாரம் செய்ய டூல்கிட்டை தயாரித்துள்ளது'' என்று காங்கிரஸ் மீது பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. இப்படி இரு கட்சிகளுமே மாறி மாறி விமர்சித்து வரும்நிலையில், ஆச்சார்யா மகாமண்டலேஸ்வரின் ஜூனா அஹாரா சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகராஜ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

கும்பமேளா
அதில் அவர் சொல்லி உள்ளதாவது:''நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதற்கு ஹரித்துவாரில் நடந்த கும்பமேளா திருவிழாதான் காரணம் என்று பிரச்சாரம் செய்யும் வகையில் டூல்கிட்டை தயாரித்துள்ளார்கள்... உண்மையில் ஹரித்துவாரில் கும்பமேளா நடந்து கொண்டிருந்தபோதே, பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகரித்து வந்தது.. அதிலும் உத்தரகாண்டில் கொரோனா அந்த அளவுக்கு தீவிரமாக அப்போது இல்லை.

கலாச்சாரம்
இந்தியாவின் கலாச்சாரம், சடங்குகள், விழாக்கள், நம்பிக்கைகள், பாரம்பரியங்கள் போன்றவை திட்டமிட்டுக் களங்கப்படுத்தப்படுகின்றன... கும்பமேளாவை அரசியலாக்குவது நல்லதல்ல.. சாதுக்கள் சமூகம் இதைக் கடுமையாகக் கண்டிக்கிறது.

திருவிழா
பிரதமர் மோடி கேட்டுக்கொண்ட அடுத்த சில நாட்களிலேயே நாங்கள் கும்பமேளா திருவிழாவை முடித்துவிட்டோம்... உயர்ந்த மதிப்புகள், பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் இந்த நாட்டில் நீங்கள் பிறந்திருந்தால், கும்பமேளாவை அரசியலாக்குவது சரியானது இல்லை" என்று அவ்தேஷானந்த் கிரி மகராஜ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications