மிக பெரிய சதித் திட்டம்? ஒரே நாளில் இருவேறு இடங்களில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்.. இருவர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இரு வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீகார் மற்றும் உபியைச் சேர்ந்த தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
கடந்த சில மாதங்களாகக் காஷ்மீரில் எந்தொவரு பெரிய அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும், இந்த நிலை கடந்த சில வாரங்களில் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க எல்லையில் பாதுகாப்புப் பணிகளை ரோந்து படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பயங்கரவாதி தாக்குதல்
இந்நிலையில், அங்கு மற்றொரு அசம்பாவித சம்பவமாக இரு வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீகாரைச் சேர்ந்த சாலையோர வியாபாரியும் உபியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரும் கொல்லப்பட்டனர். நேற்று மாலை 6.40 மணியளவில் ஸ்ரீநகரின் ஈட்கா பகுதியில் நடந்த முதல் சம்பவத்தில் 36 வயதான அரவிந்த் குமார் என்பவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டார், இருப்பினும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன் அவர் உயிரிழந்துவிட்டார்.

பீகார் வியாபாரி பலி
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தான் காஷ்மீருக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் சாலையோரம் பானிபூரி கடை வைத்திருந்தார். காஷ்மீரில் வெளிமாநில சாலையோர வியாபாரி கொல்லப்பட்டதற்கு முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா உட்படப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னதாக இம்மாத தொடக்கத்தில் இதே பகுதியில் வீரேந்திர பாஸ்வான் என்ற மற்றொரு சாலையோர வியாபாரி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

2ஆவது தாக்குதல்
இதேபோல இரண்டாவது தாக்குதல் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்தது. அங்குப் பயங்கரவாதிகள் திடீரென பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சூட தொடங்கியதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சஹீர் அகமது என்ற தொழிலாளி படுகாயமடைந்தார், இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போது அவரும் உயிரிழந்தார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சஹீர் அகமது புல்வாமா பகுதியில் தச்சராக இருந்தார். ஒரே நாளில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் நிலையத்தில் குண்டுகள்
நேற்று புல்வாமா பகுதியில் உள்ள ககாபோரா காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கையெறி குண்டுகளை வீசினர். நல்வாய்ப்பாக இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. இப்படி ஒரே நாளில் 3 இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது காஷ்மீரில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து அதிகரிப்பு
கடந்த சில வாரங்களாகவே காஷ்மீரில் உள்ள பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பண்டிகை காலத்தைக் குறிவைத்து, அதைச் சீர்குலைக்கப் பாகிஸ்தான் நாட்டில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவலும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், எல்லையில் உள்ள பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் பல ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியைக் கடந்த சில வாரங்களுக்கு முன் உயிருடன் பிடித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications