காவல் நிலையத்தில் சக போலீசின் செல்போனை திருடிய 2 போலீசார் இடைநீக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் வழக்கு தொடர்புடைய செல்போனை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு, போலீசார் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிறப்பித்தார்.
ராமநாதபுரம் ஆயுதப் படையில் பணிபுரிந்த காவலரான அசோக்குமார் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காவலர் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறிய அசோக் குமார் உறவினர்கள் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றம் சென்றனர்.
பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கு சம்பந்தப்பட்ட பொருட்களை ஒப்படைக்கும்படி சிபிசிஐடி போலீசார் கேணிக்கரை போலீசாரிடம் கேட்டுள்ளனர். பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்த அசோக்குமாரின் செல்போன் திருட்டு போனது அப்போதுதான் கேணிக்கரை போலீசுக்குத் தெரியவந்தது.
- விரைவாக தீர்ப்பு வழங்கியதால் இடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறி வழக்குத் தொடர்ந்த நீதிபதி
- இந்திய விமானப்படை போர் விமானம் ராஜஸ்தானில் விபத்து: 2 விமானிகள் பலி
இதையடுத்து திருட்டு போன செல்போனை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்தனர். செல்போன் வைத்திருந்தவர்களையும் அவர்கள் அடையாளம் கண்டனர். அவரிடம் விசாரித்த போது இந்த செல்போனை ராமநாதபுரத்தில் உள்ள செல்போன் கடையில் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக சிபிசிஐடி போலீசார் அந்தக் செல்போன் கடைக்காரரிடம் விசாரித்தபோது கேணிக்கரை காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் இருவர் 2,000 ரூபாய்க்கு இந்த செல்போனை விட்டு சென்றதாகவும், அவர்கள் இருவரும் இதுபோல் அடிக்கடி செல்போன்களை கொண்டு வந்து விற்று செல்வார்கள் என கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, எழுத்தாளர் சுரேஷ், காவலர் கமலக்கண்ணன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது காவல் நிலைய எழுத்தர் சுரேஷ் மற்றும் காவலர் கமலக்கண்ணன் இருவரும் செல்போனை எடுத்து விற்றதாக அவர்களுக்குத் தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் தொழிலதிபர் ஒருவரது மகள் காதல் விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட நகைகளை அபகரிக்கத்து விற்பனை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை போலீசார் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்ட போது வழக்கு சிபிசிஐடி விசாரணையில் உள்ளதால் இது குறித்து தகவல் அளிக்க முடியாது என தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















Click it and Unblock the Notifications