மணிப்பூரில் அமைதிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? புது ரிப்போர்ட் வேணும்.. உச்சநீதிமன்றம் உத்தரவு
இம்பால்: கடந்த 2 மாதங்களாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வரும் நிலையில், இதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து புதிய நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய மணிப்பூர் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணிப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக ஒரு வியூகத்தை வகுத்தது. அதன்படி, மைத்தேயி/மெய்டெய் எனப்படும் பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இவர்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 53 சதவிகிதமாவார்கள். இந்த வாக்குறுதி பலனளித்தது. பாஜக ஆட்சியை கைப்பற்றியது.

அதன் பின்னர் மைத்தேயி/மெய்டெய் மக்கள் பழங்குடி அந்தஸ்து கேட்டு போராட, பழங்குடியினரான குக்கி, நாகா மக்கள் இதற்கு எதிரான போராட்டத்தை தொடங்கினர். கடந்த மே மாதம் 3ம் தேதி தொடங்கிய இந்த போராட்டங்கள் கலவரமாக மாறி தற்போது வரை 100க்கும் அதிமானோரை பலி கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், நிறுவனங்கள், வாகனங்கள், வழிபாட்டுத்தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறையில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 135 பேர் உயிரிழந்துள்ளனர். 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர்.
வன்முறை அடங்காத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், சொந்த கட்சி எம்எல்ஏக்களும் குரலெழுப்பினர். ஆனால் தற்போது வரை பிரதமர் மோடி மணிப்பூர் எனும் வார்த்தையை எங்கும் உச்சரிக்கவில்லை. அதேபோல, மணிப்பூருக்கும் வந்து பார்க்கவில்லை. எனவே முதலமைச்ரச் பைரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுக்க தொடங்கியது. அதேபோல பைரேன் சிங்கும் ராஜினாமா செய்வதாக கூறி ஆளுநரை சந்திக்க சென்றார்.
ஆனால் தொண்டர்கள் சிலர் இவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதால் தனது ராஜினாமா திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். இது எதிர்க்கட்சிகள் மற்றும் போராட்ட குழுக்களிடையே மேலும் அதிருப்தியை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் குக்கி சமூகத்தினருக்கு ராணுவ பாதுகாப்பு வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொண்டு நிறுவனம் ஒன்று மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவின் விசாரணையின் போது மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசு தரப்பில் ஆஜராகியிருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மாநிலத்தில் அமைதி திரும்புவது மெதுவாக இருக்கிறது. ஆனால் நிச்சயம் அமைதி திரும்பிவிடும்" என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, "வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடற்றவர்களுக்கும் மறு வாழ்வு வழங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? படைகள் நிலை நிறுத்தம் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து புதிய அறிக்கையை வரும் 10ம் தேதிக்குள் மணிப்பூர் அரசு தாக்கல் செய்ய வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications