ஜெ. விடுதலையை எதிர்த்து கர்நாடகா அப்பீல் செய்யாவிட்டால் ஜூன் 1-ல் நானே முறையிடுவேன்: சு.சுவாமி
டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு செய்யாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் தாம் ஜூன் 1-ந் தேதி அப்பீல் செய்வேன் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி அறிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இது ஜெயலலிதா தரப்புக்கு நிம்மதியைக் கொடுத்திருந்தாலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு குமாரசாமி தீர்ப்பை விமர்சித்து வருகின்றன.

நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் கூட்டல் கணக்கில் பிழைகள் இருப்பதாக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகளை கர்நாடகா அரசு மேற்கொண்டுள்ளது.
இதனிடையே பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்கிறதா? இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்க உள்ளேன். ஜூன் 1-ந் தேதி வரை கர்நாடகா அரசு என்ன செய்யப் போகிறது என காத்திருப்பேன்.
அப்படி கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால் ஜூன் 1-ந் தேதி நானே உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வேன் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமும் இல்லை என்றும் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
I have decided to file SLP in SC after June 1st if Ktaka govt does not file. So no need to go to KHC
— Subramanian Swamy (@Swamy39) May 14, 2015 ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடருவதற்கு அடிப்படையாக இருந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்தே ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
அதே நேரத்தில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதாவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி தற்போது ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக கூறியிருப்பது அக்கட்சியில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது,.












Click it and Unblock the Notifications