சசி தரூரை திகார் சிறையில் அடைத்து விசாரிக்க வேண்டும்: ஐடியா கொடுக்கும் சு. சுவாமி!
டெல்லி: சசி தரூரை கைது செய்து திகார் சிறையில் வைத்து விசாரித்தால் உண்மை வெளியே வரும் என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

இதுகுறித்து, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு விசாரணையை, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் வேண்டுமென்றே காலம் தாழ்த்திவிட்டது. எனவே, பொது நல வழக்கு தொடர நான் திட்டமிட்டிருந்தேன். இந்நிலையில்தான் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், போலீசாருக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். எனவே விசாரணை வேகம்பிடித்துள்ளது.
இன்று சசிதரூரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. நல்ல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இருந்தாலும், சசி தரூர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். திகார் சிறை போன்ற ஏதாவது ஓரிடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். கொலை போன்ற குற்றங்களில் கைது விசாரணைதான் நல்ல பலனை கொடுக்கும்.
ஏனெனில், சசிதரூர் முன்னுக்கு பின் முரணாகவே பதில் சொல்லி வருகிறார். ஹோட்டலுக்கு வந்த பிறகுதான் சுனந்தா இறந்தது, தெரியவந்ததாக சசி தரூர் கூறியுள்ளார். ஆனால் மாலையிலேயே அவருக்கு போனில் தகவல் போயுள்ளது. சுனந்தா உடலில் காயங்கள் இருப்பது தெரிந்தும், கணவரான சசி தரூர், அது கொலையில்லை என்று கூறியுள்ளார். எனவே, கொலையாளி யார் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்புள்ளது.
ஐபிஎல் முறைகேடுகளுக்கும், இக்கொலைக்கும் நேரடி சம்மந்தம் இருக்க முடியாது. ஆனால் ஐபிஎல் கோணத்தில் விசாரித்தால், பல கட்சிகளில் இருந்தும் கறுப்பு ஆடுகள் வெளியே வரும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications