பவர் ஷேரிங்.. முன்னேறும் தாலிபான்.. இறங்கி வரும் ஆப்கான். அரசு.. அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள அழைப்பு?
காபுல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், ஆட்சியை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆப்கான் அரசு இறங்கி வந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. தாலிபான் படைகள் வென்று வரும் நிலையில் ஆட்சி அதிகாரத்தை இரண்டு தரப்பும் பகிர்ந்து கொள்ளலாம், போரை இதோடு நிறுத்திவிடலாம் என்று ஆப்கான். அரசு தரப்பு தூது விட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
ஆப்கான் சிவில் வார் தற்போது உச்சத்தில் உள்ளது. அமெரிக்கா எப்போது ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதாக அறிவித்ததோ அந்த நொடியிலேயே அந்த நாடு கிட்டத்தட்ட தாலிபான்கள் கைவசம் வந்துவிட்டது. தாலிபான்களுடன் செய்த அமைதி பேச்சுவார்த்தையின் முடிவாக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற ஒப்புக்கொண்டது.
கணக்குப்படி செப்டம்பர் 11ம் தேதி 2021ல்தான் அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும். இரட்டை கோபுர தாக்குதல் நடந்து சரியாக 20 வருடம் முடியும் போது படைகள் வாபஸ் வாங்கப்படுவதாகவே முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் பொருளாதார நிலை உள்ளிட்ட ல்வேறு அழுத்தங்களால் அமெரிக்க அதிபர் பிடன் ஆப்கானிஸ்தானை விட்டு இந்த மாதம் இறுதியிலேயே வெளியேறும் முடிவை எடுத்துவிட்டார்.

வெளியேற்றம்
அமெரிக்க படைகள் இந்த மாதம் இறுதியில்தான் வெளியேறுகிறது என்று அதிகாரபூர்வமாக சொன்னாலும் கூட ஏற்கனவே 90 சதவிகித படைகள் அங்கிருந்து வெளியேறிவிட்டன. அங்கு அமெரிக்க படைகள் பெயருக்கு மட்டுமே சில இடங்களில் உள்ளது. அமெரிக்க படைகள் வெளியேற வெளியேற அந்த பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டன. முக்கியமாக 9 மாகாண தலைநகரங்கள், எல்லை பகுதிகள், விமான நிலையங்கள், தூதரகங்கள், 290க்கும் அதிகமான மாவட்டங்களில் தற்போது தாலிபான்களின் வெள்ளை கொடிதான் பறந்து கொண்டு இருக்கிறது.

திணறல் ஏன்?
அமெரிக்க படைகள் பயிற்சி கொடுத்தது என்றாலும் கூட ஆப்கான் படைகள் அவ்வளவு திறமை கொண்டது கிடையாது. ஆப்கான் படைகளும் எண்ணிக்கையில் தாலிபான்களை விட கொஞ்சம் கம்மிதான். அதோடு தாலிபான்கள் கொரில்லா ஸ்டைல் அட்டாக் பாணி கொண்டது என்பதாலும் உடனுக்குடன் ஆப்கான் படைகள் ஒவ்வொரு நகரத்திலும் வரிசையாக வீழ்ந்து வருகிறது. பல நகரங்களில் சண்டையே நடக்காமல் தாலிபான் படைகளிடம் ஆப்கான் படைகள் சரண்டர் ஆகிவிடுகிறது.

மாற்றம்
இதனால் தற்போது ஆப்கான் ராணுவத்தின் தலைமை ஜெனரல் வாலி அஹமத்சாய் கூட மாற்றப்பட்டு இருக்கிறார். தாலிபான்களுக்கு எதிராக இவரின் வியூகங்கள் சரியாக இல்லை என்று புகார் எழுந்த நிலையில் அதிபர் அஷ்ரப் கானி இவரை பதவியில் இருந்து நீக்கி உள்ளார். இவருக்கு பதிலாக ஹிபாத்துல்லா அலிசாய் தற்போது தலைமை ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கான் படைகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தலைநகர்
இது போக இன்னொரு பக்கம் காபுலுக்கு மிக அருகே இருக்கும் நகரங்களையும் கூட தாலிபான்கள் கைப்பற்ற தொடங்கிவிட்டது. காபுலில் இருந்து வெறும் 150 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் காசானி நகரத்தையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் அடுத்த வார இறுதியில் காபுலில் மிகப்பெரிய மோதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா உளவுப்படை அறிக்கையின்படி தாலிபான்கள் மொத்த நாட்டையும் 90 நாட்களுக்குள் பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த வேகத்தை பார்த்தால் அதற்கு முன்பாக தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இறங்கி வரும் அரசு?
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், ஆட்சியை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆப்கான் அரசு இறங்கி வந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் செய்தி சேனல்கள் காலையில் இருந்து பிரேக்கிங் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. தாலிபான் படைகளுக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆட்சி அதிகாரத்தை பிரித்துக்கொள்ளலாம். இதற்கு மேலும் மோதல் வேண்டாம்.

அமைதி
அமைதிக்கு திரும்பலாம். தொடர்ந்து போரில் ஈடுபட்டால் அது சேதங்களை ஏற்படுத்தும் என்று ஆப்கான் படைகள் மற்றும் அரசு சார்பாக தாலிபான்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போரை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் இந்த தூது அனுப்பப்பட்டு இருக்கிறதாம். ஆனால் இதை தாலிபான்கள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. தாலிபான்கள் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானியை கொஞ்சம் கூட விரும்பவில்லை.

தாலிபானின் ஒரே நோக்கம்
அவர் ஆட்சியில் இருக்கும் வரை எந்த பேச்சுவார்த்தையும் நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. அவரை ஆட்சியில் இருந்து நீக்கிவிட்டு, காபுலை கைப்பற்றிய பின் யாராவது மிச்சம் இருந்தால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தில்தான் தாலிபான்கள் உள்ளனர். கண்டிப்பாக வெற்றிக்கு அருகில் இருக்கும் தாலிபான்கள் பவர் ஷேரிங் செய்து கொள்ள விரும்ப மாட்டார்கள், அவர்களுக்கு இது அவசியமும் இல்லை என்றே கூறப்படுகிறது.
Recommended Video

கைவிடப்பட்ட ஆப்கான் படைகள்
இதனால் ஆப்கான் படைகள் தற்போது கிட்டத்தட்ட சர்வதேச அளவில் கைவிடப்பட்டுள்ளது. தாலிபான்களுக்கு பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு தருகிறது. தாலிபான்களை எதிர்க்கும் என்று கருதப்பட்ட சீனாவும் இதில் வாய் திறக்கவில்லை. இந்தியாவும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இதனால் ஆப்கான் படைகள் சர்வதேச ஆதரவு கிடைக்காமல் தாலிபான்களிடம் இறங்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் மொத்தமாக ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் செல்வதற்கான பிரகாசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications