ஆப்கானிஸ்தான்: காபூலின் நாலா புறமும் சூழ்ந்த தாலிபன்கள் - களத்தில் என்ன நடக்கிறது?
ஆப்கான் தலைநகர் காபூலின் நாலா புறமும் தாலிபன்கள் சூழ்ந்துள்ளனர். அங்குள்ள வீதிகளில் தாலிபன்கள் ஆயுதங்களுடனும் டாங்கிகளுடனும் உள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், தலைநகரம் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்று காபூல் குடியிருப்புவாசிகளுக்கு நம்பிக்கையுட்டும் செய்தியை தமது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்டிருக்கிறது அதிபர் அலுவலகம்.
எனினும், அந்த பிராந்தியத்தில் விரிவாக செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிபிசியின் யால்டா ஹக்கிம், "தாலிபன்கள் தலைநகருக்குள் முன்னேறி வரும்போது பெரிய எதிர்ப்பு கிளம்பவில்லை," என்று தெரிவித்தார்.
https://twitter.com/BBCYaldaHakim/status/1426805816531750912
ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நிலைமை, மனிதாபிமான பேரழிவாகி விட்டது என்று ஐ.நா சர்வதேச வளர்ச்சிக்குழுவின் முன்னாள் செயலாளர் ரோரி ஸ்டீவார்ட் கூறியுள்ளார்.
"இந்த நாட்டில் எல்லாமே தவறாக நடக்கிறது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மருத்துவ நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கியிருக்கிறார்கள். எங்கும் சூறையாடல்கள் நடக்கின்றன. சொந்த நாட்டை விட்டே மக்கள் அகதிகள் போல வெளியேறுகிறார்கள். நடக்கும் சம்பவங்களைப் பார்த்து பல ஆப்கானியர்களும் அச்சம் அடைந்து காணப்படுகின்றனர்", என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், காபூலை விட்டு வெளியேற குடிமக்கள் விரும்பினால், அவர்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் வெளியே செல்ல அனுமதிக்குமாறு தமது போராளிகளுக்கு தாலிபன் தலைமை உத்தரவிட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், தமது போராளிகளை காபூல் எல்லையிலேயே தயாராக இருக்குமாறும் மக்கள் நெரிசல் உள்ள அந்த நகரில் அவர்களின் பாதுகாப்புக்கு அங்குள்ள ஆட்சியாளர்களே தற்போதைக்கு பொறுப்பு என்றும் தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.
அமைதியான வழியில் அதிகாரத்தை தங்கள் வசம் ஆட்சியாளர்கள் ஒப்படைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தாலிபன்கள் தரப்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- ஆஃப்கானிஸ்தான்: காபூலில் தஞ்சம் அடைந்த மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் - கள நிலவரம்
- கந்தஹாரை கைப்பற்றிய தாலிபன் – பல லட்சம் மக்கள் பட்டினியால் வாடும் பரிதாபம்
காபூலுக்கு முன்னர் கடைசி முக்கிய நகரை கைப்பற்றிய தாலிபன்கள்
தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகள் வலுவாக இருந்த வடக்குப் பகுதியின் கடைசி முக்கிய நகரமான மசர் இ ஷரீஃப்பையும் தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர்.
பன்னெடுங்காலமாகவே மசர் இ ஷரீஃப் நகரம் தாலிபன்களுக்கு எதிராக இருந்தது. அப்படிப்பட்ட நகரத்தை தாலிபன்கள் கைப்பற்றி இருப்பது, தாலிபன்களின் முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு தான் ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி அந்நகரத்தில் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் மசர் இ ஷரீஃப் உட்பட பல்வேறு முக்கிய நகரங்கள் தொடர்ந்து தாலிபன்கள் வசமாகி வருகின்றன. மேலும் தாலிபன்கள் ஆப்கன் தலைநகரான காபூலை நோக்கி முன்னேறி வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த வன்முறையால் சுமார் 2.5 லட்சம் மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களை விட்டு பாதுகாப்புக்காக காபூலுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுவரை தாலிபன்கள் கைப்பற்றிய நகரங்களில், பெண்கள் புர்கா அணிய கட்டாயப்படுத்தப்படுவதாகவும், சமூக விதிகளை பின்பற்றாதவர்களை அடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேற்குலக நாடுகளோ ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் இருக்கின்றனர்.
மசர் இ ஷரீஃப் வீழ்ந்தது எப்படி?
ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் தலைநகர் மற்றும் ஆப்கனின் நான்காவது பெரிய நகரமான மசர் இ ஷரீஃப் பெரிய போராட்டங்களின்றி தாலிபன்கள் வென்றதாக அந்நகரத்தின் உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அந்நகரத்தில் தேசிய ராணுவம் முதலில் சரணடைந்ததால், மற்ற அரசுக்கு ஆதரவான படைகள் மற்றும் ஆயுதமேந்திய போர் குழுக்கள் சரணடைய வேண்டி வந்ததாக பால்க் மாகாணத்தைச் சேர்ந்த அபாஸ் இப்ராஹீம்சாதா அசோசியேடட் பிரஸ் முகமையிடம் கூறியுள்ளார்.
மசர் இ ஷரீஃப் ஒரு முக்கிய பொருளாதார மையம். இந்நகரம் உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைப் புறத்தில் அமைந்திருக்கிறது. 1990-களில் இந்நகரம் தாலிபன்கள் வசம் இருந்தது நினைவுகூரத்தக்கது.
- ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா
- உலகத்தால் கைவிடப்படும் ஆப்கானிஸ்தான் - போர்க்களத்தில் இருந்து ஒரு இந்திய பெண் செய்தியாளரின் பார்வை
உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் டோஸ்டம் மற்றும் தஜிக் தலைவர்களில் ஒருவரான அட்டா மொஹம்மத் நூர் ஆகியோர் அம்மாகாணத்தை விட்டு தப்பி ஓடியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அப்துல் ரஷீத் டொஸ்டம்மின் ஆளில்லா வீட்டில் தாலிபன்கள் இருப்பது போன்ற சில காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த தோல்விக்கு ஆப்கன் அரசுப் படைகளே காரணம் என சனிக்கிழமை வெளியான ஃபேஸ்புக் பதிவில் தஜிக் தலைவர் அட்டா மொஹம்மது நூர் குறை கூறியுள்ளார். மேலும் அரசுப் படைகள் தங்களின் ஆயுதங்கள் மற்றும் சாதனங்களை தாலிபன்களிடம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தானும் (நூர்), டோஸ்டமும் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தாலிபன்கள் ஒவ்வொரு வீடாக சோதனை செய்கிறார்கள். நாங்கள் வீட்டிலேயே தான் இருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை" என அந்நகரத்தைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
மேலும் "நாங்கள் மிகவும் பயத்தில் இருக்கிறோம். என் குழந்தைகள் பயத்தில் இருக்கிறார்கள். என் மனைவி அழுது கொண்டிருக்கிறார். நாளை என்ன செய்யப் போகிறோம்?" என்கிறார் அவர்.
மசர் இ ஷரீஃப் போலவே, சனிக்கிழமை (ஆகஸ்ட் 14) பக்திகா மற்றும் குன்வார் மாகாண தலைநகரங்களும் தாலிபன்கள் வசமாகியுள்ளன.
குன்வர் மாகாணத்தைச் சேர்ந்த அசாதாபாத் நகரத்து மக்கள் தாலிபன்களின் கொடியை ஏந்திக் கொண்டு சாலைகளில் நடப்பது போன்ற காட்சிகள், சரிபார்க்கப்படாத காணொளி ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட மாகாண தலைநகரங்கள் தாலிபன்கள் வசம் உள்ளன. முக்கிய நகரங்களை எடுத்துக் கொண்டால் காபூல் மற்றும் ஜலாலாபாத் மட்டுமே இப்போதும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
தாலிபன் கமாண்டர்கள், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் திருமணமாகாத பெண்களை தங்களின் போராளிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கும் படி கோருவதாக சில செய்திகள் வெளியாகி உள்ளன.
"தாலிபன்கள் என்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக, என் உயிரை விட்டுவிடுவேன்" என தன் இரு சகோதரிகளோடு பர்வான் நகரத்தை விட்டு வெளியேறி தற்போது காபூல் நகரத்தில் இருக்கும் 35 வயதான முஸ்டா என்கிற பெண் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதி: "விவசாயிகள் நலனில் கவனம் செலுத்துவோம்" - சுதந்திர தின உரை முக்கிய தகவல்கள்
- எதிரிகளின் ரத்தம் குடித்த சிதியர்கள் - யார் இந்த திகில் உலக ராஜாக்கள்?
- கொரோனா தொற்றில் இருந்து இந்தியா மீளவில்லை - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் எச்சரிக்கை
- ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா
- கோவை தலித் அரசு ஊழியர் காலில் விழுந்தது ஏன்? புதிய வீடியோ காட்டும் தலைகீழ் திருப்பம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
















Click it and Unblock the Notifications