தமிழக விவசாயிகள் டெல்லியில் மண்ணில் புதைந்து போராட்டம்!
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் விநாயகரை வைத்து மண்ணில் புதைந்து போராட்டம் நடத்தினர்.
டெல்லி: விநாயகர் சதூர்த்தி தினமான இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் மண்ணுக்குள் புதைந்து போராட்டம் நடத்தினர். புதைமணலுக்கு முன்பாக ஒரு விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்தனர்.
தேசிய தென்இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பிலான இந்த போராட்டம் 41 ஆவது நாளாகத் தொடர்கிறது. சாலைகளில் உருண்டு போராட்டம் நடத்தியவர்கள் இன்று மணலுக்குள் புதைந்து நூதனப் போராட்டம் நடத்தினர்.
தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையிலான இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லியில் போராட்டம்
தென் இந்திய நதிகளை இணைப்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, மீத்தேன் எடுக்கும் பணியில் இருந்து ஒ.என்.ஜி.சியை வெளியேற்றுவது, வறட்சியில் கருகிய பயிர்களுக்கு நஷ்ட ஈடு உட்படப் பல்வேறு பிரச்சனைகள் போராட்டத்தின் கோரிக்கைகளாக உள்ளன.
இதில், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு டெல்லியின் ஜந்தர் மந்தரில் அன்றாடம் ஒரு வித்தியாசமானப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தவகையில், இன்று செல்லபெருமாள், சிவா மற்றும் காமராஜ் ஆகிய 3 விவசாயிகள் தமது கழுத்து வரை மணலுக்குள் புதைத்து கொண்டு போராட்டம் நடத்தினர்.

நூதன போராட்டம்
சில நாட்களுக்கு முன்பாகவும் அங்கு விவசாயிகளின் கீழே விழுந்து போராட்டம் நடத்தினர். ஒருநாள் அந்த மணலில் மாட்டை போல் ஒரு மனிதரை கட்டிய விவசாயிகள் ஏர் உழுதனர். மற்றொரு நாளில், அங்கு நாற்று நட்டு பயிர் செய்தபடி போராட்டம் நடத்தினர்.

மணலில் புதைந்து போராட்டம்
அப்போது அவர்கள் மோடி ஐயா மோடி ஐயா... எங்களை பாருமய்யா பாருமய்யா என்று முழக்கமிட்டனர்.
இன்று விநாயகர் சதூர்த்தி என்பதால் அந்த புதைமணலுக்கு முன்பாக ஒரு விநாயகர் சிலையை வைத்து தமிழக விவசாயிகள் பூஜை செய்தனர். இதனை, ஜந்தர் மந்தர் வழியாக செல்லும் பொதுமக்கள் பலரும் வித்தியாசமாக பார்த்து சென்றனர்.

செவி சாய்க்க மறுப்பு
எங்கள் போராட்டக் குரலுக்கு பிரதமர் நரேந்தர மோடி செவிசாய்க்க மறுக்கிறார். விவசாயிகளின் எந்த பிரச்சனைகளையும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறது.

போராட்டம் தொடரும்
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல், பிரதமரை சந்திக்காமல் நாம் இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டோம். அதுவரையிலும் வெயில், மழை என எதை பொருட்படுத்தாமல் நடைபெறும் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
