டாக்ஸி ஓடலை, ஆட்டோ ஓடலை.. எல்லோரும் ஸ்டிரைக்.. திண்டாட்டத்தில் மும்பை மக்கள்!
மும்பை: பலதரப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பையில் இன்று டாக்ஸி, ஆட்டோ டிரைவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.
மும்பையில் 18 ஆயிரம் ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர்கள் மற்றும் 12 ஆயிரம் டாக்ஸி உரிமையாளர்களை உள்ளடக்கியது ஸ்வபிமான் யூனியன்.

இம்மாதம் 9ம் தேதி ஸ்வபிமான் யூனியன் சார்பில் மகாராஷ்டிரா போக்குவரத்து கமிஷனர், போக்குவரத்து அமைச்சர் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், மொபைல் அப்ளிகேஷன் கேப்களான உபேர், ஓலா, மெரு பிளஸ் போன்றவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டிருந்தது.
மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் 15ம் தேதி ( இன்று ), ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப் படவில்லை. எனவே, கூறியபடி ஸ்வபிமான் யூனியன் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. மாலை 5 மணி வரை இந்த வேலை நிறுத்தம் நீடிக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆட்டோ மற்றும் டாக்ஸி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் மும்பையில் பெரும்பாலான ஆட்டோ, டாக்ஸிகள் ஓடவில்லை. இதனால், வாரத்தின் முதல் வேலை நாளான இன்று மும்பை மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications