பஜனை பாடலால் ஒலிமாசு வராதா? தொழுகையை ஒலிபரப்ப தடை கோரிய வழக்கில் குஜராத் ஹைகோர்ட் அதிரடி கேள்வி
அகமதாபாத்: மசூதியில் தொழுகை அழைப்புக்கு ஒலிபெருக்கி பயன்படுத்த தடை கோரிய பொதுநல மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. அதோடு 10 நிமிட இஸ்லாமிய தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறது என்றால் கோவில்களில் ஒலிபரப்படும் பாடல், பஜனைகளை என்னவென்று சொல்வீர்கள்? என மனுதாரருக்கு அதிரடியாக கேள்வி எழுப்பியது.
குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு என்பது மசூதிகளில் தொழுகைக்காக இஸ்லாமியர்களை அழைக்கும் ஒலிபெருக்கி அழைப்பை தடை செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டிருந்தது.

இந்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தவர் பஜ்ரங்கதள அமைப்பை சேர்ந்த சக்தி சிங் ஜாலா. இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மசூதிகளில் தொழுகை அழைப்புக்கு ஆஸான் ஒலிக்கப்படுகிறது. இதனால் ஒலி மாசுபாடு ஏற்படுகிறது. அதோடு இந்த ஒலிபெருக்கியின் சத்தத்தால் குழந்தைகளின் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. அதோடு மக்களுக்கு இந்த சத்தம் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மசூதிகளில் தொழுகைக்கான ஒலிபெருக்கி அழைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த பொதுநல மனு குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் மற்றும் நீதபதி அனிருத்தா மேயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அதாவது மசூதியில் ஒருநாளில் அதிகபட்சமாக 10 நிமிடங்கள் மட்டுமே ஆஸான் ஒலிக்கப்படுகிறது. இது மனிதர்களை பாதிக்கும் அளவில் ஒலி மாசுவை உருவாக்குகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
இதனை நிரூபிக்க அறிவியல்பூர்வமான ஆதாரம் இருக்கிறதா?. ஏனென்றால் ஒலி மாசுபாட்டை கணக்கீடு செய்ய அறிவியல் பூர்வமான நடைமுறை உள்ளது. ஆனால் அதுபற்றிய தரவுகள் எதுவும் இந்த மனுவில் இல்லை. மேலும் இதுபோன்ற பொதுநல மனுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் பல ஆண்டுகளாக ஆஸான் ஒலிப்பு என்பது 5 முதல் 10 நிமிடங்கள் வரை நடக்கிறது.

மாறாக கோவிலில் மேளதாளங்கள், இசையுடன் கூடிய பஜனை பாடல்கள் அதிகாலை 3 மணிக்கு தொடங்குகிறது. வெவ்வேறு நாட்களிலும் இது நடந்து வருகிறது. இதுமட்டும் யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதா?. கோவிலில் இருக்கும் மணி சத்தம் அதன் வளாகத்தில் மட்டும் தான் ஒலிக்குமா? வளாகத்தை விட்டு வெளியே கேட்காதா?'' என மனுதாரரின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
இதுபோன்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்றம் இறுதியாக பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது. அதாவது மசூதிகளில் தொழுகைக்கான ஒலிபெருக்கியை தடை செய்யக்கோரிய பொதுநல மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் நீதிபதிகள் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications