போலீஸ் நீக்கத்திற்கு எதிர்ப்பு.. மணிப்பூரில் மீண்டும் டென்ஷன்.. 2 பேர் பலி! இன்டர்நெட் முடக்கம்
இம்பால்: மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கூட்டத்தை கலைக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் 2 பேர் பலியாகினர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் பதற்றமான சூழலும் வன்முறை சம்பவங்களும் நீடித்து வருகின்றன. மெய்தி மற்றும் குகி இனத்தினர் இடையே நடந்து வரும் இந்த கலவரத்தில் சுமார் 200 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர். மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழலை கட்டுப்படுத்த மாநில போலீசார் மட்டுமின்றி ராணுவம் வரை களம் இறக்கப்பட்டது.

எனினும், வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து அங்கே வன்முறை சம்பவங்கள் வெடிப்பதும் பிறகு பதற்றம் ஏற்படுவதுமாக நீடித்து வருகிறது. இம்பால் கிழக்கு மாவட்டத்தில் கடந்த 10-ந்தேதி முதல் கிராமங்கள் இடையே துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதற்கிடையே, மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த காவலர் சியாம் லால், ஆயுதம் தாங்கிய குழுவினருடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு அங்குள்ள குக்கி இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காவலருக்கு ஆதரவாக குக்கி மக்கள் கராசந்த்பூரில் திரண்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை மக்கள் சூறையாடியதால் அங்கு கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் போரட்டக்கார்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 25 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இருந்த வாகனங்களுக்கும் போராட்டக்கார்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு போர்க்களம் போல காட்சி அளித்தது. பதற்றத்தை தணிக்க மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications