ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கியதில் ஒருவர் பலி, 3 பேர் காயம்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார், மூன்று பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் ராணுவ உடையில் வந்த 3 தீவிரவாதிகள் ஜம்மு-பதங்கோட் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மஹிந்திரா பொலிரோ காரை நிறுத்தி அதை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் காரில் இருந்த ஒருவர் பலியானார், 3 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து தீவிரவாதிகள் அந்த பொலிரோ காரை எடுத்துக் கொணடு தப்பிவிட்டனர். சிறிது நேரம் கழித்து தீவிரவாதிகள் ஜங்லோட் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே வந்து ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் துவங்கினர். இதில் ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்தார்.
தீவிரவாதிகள் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தாக்குதல் நடத்துவதற்காக அண்மையில் தான் இந்தியாவுக்குள் புகுந்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடம் ஹிராநகர் அருகில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிராநகர் காவல் நிலையத்தை 3 பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்கியதில் உயர் அதிகாரி உள்பட 11 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications