காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் துப்பாக்கி சூடு! 48 மணி நேரத்தில் 2வது தீவிரவாத சம்பவம்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகி இருந்த நிலையில், மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அங்குத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத சம்பவங்கள் என்பது தொடர்கதையாகவே இருக்கிறது.. சில மாதங்களாக அங்குப் பெரியளவில் தீவிரவாத சம்பவங்கள் நடக்காமல் இருந்தது.

பயங்கரவாத சம்பவம்: இதற்கிடையே இப்போது காஷ்மீரில் மீண்டும் அடுத்தடுத்து பயங்கரவாத சம்பவங்கள் நடக்கத் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத சம்பவம் ஒன்று அரங்கேறியது.. பக்தர்களை ஏற்றிச் சென்று கொண்டு இருந்த பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீண்டும் தாக்குதல்: மோடி பிரதமராகப் பதவியேற்ற நாளில் நடந்த இந்தச் சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் பகுதியில் மீண்டும் ஒரு பயங்கரவாத சம்பவம் நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர். ஹிராநகர் பகுதியில் உள்ள சைதா கிராமம் அருகே பயங்கரவாதிகள் இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர். திடீரென செவ்வாய்க்கிழமை மாலை கிராமத்திற்குள் புகுந்த அந்த பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அருகில் இருந்த காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.
ஒருவர் பலி: சர்வதேச எல்லைக்கு அருகே நடந்த இந்தத் தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல இருவர் காயமடைந்தனர். அவர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பதிலடி: இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதிகளைப் பிடிக்க.. அவர்கள் தப்பிச் சென்ற காடுகளில் சிறப்பு ஆப்ரேஷன் நடத்தப்பட்டது. அதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தான் பக்தர்கள் மீது தாக்குதல் நடந்தது.. இதற்கிடையே 48 மணி நேரத்திற்குள் மீண்டும் அங்குப் பயங்கரவாத சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications