For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலவுக்கு சரக்கு டெலிவரி: நாசாவோடு சேர்ந்து களத்தில் இறங்கும் நிறுவனங்கள்

By BBC News தமிழ்
|

கிரகங்களுக்கு இடையிலான பாதை குறித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளதாகக் கூறிக்கொள்ளும் பலர் இங்கு இல்லை. ஆனால், டிம் கிரைன் அதில் முனைவர் பட்டம் பெற்றவர்.

1990-களில், டெக்சாஸில் உள்ள ஆஸ்டினில் தனது முனைவர் பட்டத்திற்காக உழைத்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் செவ்வாய் கிரகத்திற்கான பயணங்களில் பணியாற்றவேண்டும் என்று அவர் விரும்பினார். மேலும் 2000-ஆம் ஆண்டில் அவர் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் நாசாவுடன் தனது கனவு வேலையைச் செய்தார்.

"இன்னும் சில ஆண்டுகளில் விண்வெளி நிலையத்தை முடித்துவிடுவோம். அதன்பின் அடுத்த பெரிய மனித விண்வெளிப் பயணத் திட்டம் செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதுதான் என்று 2000-ஆம் ஆண்டில் கருதினேன்," என்கிறார் டிம் கிரைன்.

ஆனால், விஷயங்கள் சரியாக வேலை செய்யவில்லை. அவர் நாசாவில் சேர்ந்த சிறிது காலத்திலேயே ஏஜென்சியின் முன்னுரிமைகள் மாறின.

"கொலம்பியா விண்கலத்தை இழந்தோம், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் அதனால், செவ்வாய் கிரகப் பயணம் முன்னுரிமைகளின் வரிசையிலிருந்து நீக்கப்பட்டது," என்று அவர் விளக்குகிறார்.

அவர் சந்திரனுக்கும் இறுதியில் செவ்வாய்க்கும் திரும்புவதற்கான ஒரு லட்சியத் திட்டமான கான்ஸ்டலேஷன் என்ற மற்றொரு நாசா திட்டத்திற்கு மாறினார். ஆனால், 2010-ஆம் ஆண்டின் வாக்கில் அதுவும் கைவிடப்பட்டது.

"நாசாவிடம் நிலா தொடர்பான திட்டங்களில் எந்த வாய்ப்பும் இல்லை என்பதில் நான் சிறிது ஏமாற்றமடைந்தேன்," என்கிறார் கிரைன்.

எனவே, நாசாவுடன் பத்தாண்டுகள் பணியாற்றிய பிறகு, அவர் ஸ்டீவ் அல்டெமஸ் மற்றும் கேம் கஃபாரியிஅன் ஆகியோருடன் சேர்ந்து இண்டியூடிவ் மிஷின்ஸ் (Intuitive Machines) நிறுவனத்தை உருவாக்கினார்.

சிக்கலான பொறியியல் திட்டங்களுக்கு தங்களுடைய நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதே அவர்களின் திட்டமாக இருந்தது. அதை அவர்கள் சில ஆண்டுகளாகச் செய்தார்கள்.

ஆனால், 2018-ஆம் ஆண்டில் கூட்டாளிகளால் தவிர்க்க முடியாத ஒரு வாய்ப்பு வந்தது.

அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், வணிகரீதியிலான லூனார் பேலோட் சேவைகள் (CLPS) என்ற திட்டத்தை நாசா அறிமுகப்படுத்தியது. இது நிலவுக்கு சரக்குகளை எடுத்துச் செல்ல தனியார் நிறுவனங்களுக்கு ஆணையிடும் திட்டம்.

அப்போலோ 17
Getty Images
அப்போலோ 17

2025-ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்குத் திரும்பிச் செல்வதற்கான நாசாவின் சமீபத்திய திட்டமான ஆர்டிமிஸூக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கருவிகள் மற்றும் சாதனங்கள் அந்த சரக்குகளில் அடங்கும்.

எனவே, அவர்கள் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு, ஒன்றாகச் சேர்ந்து ஒரு திட்டத்தைப் பெறத் துடித்தார்கள்.

"30 நாட்களுக்கு ஒரு நிலவுப் பயணத்திற்கான திட்டத்தை எழுதுவது, புதிய அனுபவமாக இருந்தது. மேலும், எங்கள் போட்டியாளர்களான ஆஸ்ட்ரோபொடிக் மற்றும் ஆர்பிட் பெயாண்ட் உடன் நாங்களும் வெற்றியடைந்தோம். பிறகு எங்கள் வாழ்க்கையே மாறியது," என்கிறார் டிம் கிரைன்.

ஆனால், ஒப்பந்தத்தை வெல்வது முதல் படி மட்டுமே. அடுத்ததாக நிலவுக்குச் செல்லக்கூடிய ஒரு விண்கலத்தின் வடிமைப்பை உருவாக்க வேண்டியிருந்தது.

"ஒரு முழு திட்டத்தையும் ஒன்றாக இணைக்கவேண்டும் என்பதை நாங்கள் விரைவாகக் கண்டுபிடித்தோம். எங்களுக்கு செயல்பாடுகள் தேவையாக இருந்தது. எங்களுக்கு முழு பேலோட் ஒருங்கிணைப்புக் குழு தேவையாக இருந்தது.

இவையனைத்தையும் முழுவதுமாகச் சேர்த்துப் பார்த்தீர்களானால், எங்களிடம் ஒரு சிறிய விண்வெளித் திட்டமே இருப்பது தெரியும்," என்றார் கிரைன்.

ஒரு நிழல் வரைபடத்தைத் தவிர வேறொன்றுமில்லாமல் தொடங்கி, நோவா-சி என்ற விண்கலத்தை உருவாக்க, இண்டியூடிவ் மிஷின்ஸுக்கு மூன்று ஆண்டுகள் ஆனது.

அவர்களுடைய பொறியாளர்கள் தற்போதுள்ள விண்வெளி தொழில்நுட்பத்தைப் பற்றிய அறிவை, தங்கள் சொந்த வளர்ச்சியோடு கலந்து பயன்படுத்தினார்கள்.

நன்கு முயற்சி செய்து ஒரு கலவையாக, மீத்தேன் மற்றும் திரவ ஆக்சிஜனை பயன்படுத்தும் அதன் உந்துவிசை அமைப்பை நிறுவனம் உருவாக்கியது.

இது ஓர் எரிபொருளும்கூட. எதிர்கால பயணங்களுக்கு ஆற்றல் அளிக்க விண்வெளியில் ஒருநாள் தயாரிக்கப்படலாம்.

"நமக்கு இதுவரை தெரிந்த அளவில், பிரபஞ்சத்தில் மிக அதிகமாக உள்ள இரண்டு ரசாயனங்களான, கரிமம் மற்றும் நீர் இருக்கும் எந்த இடத்திலும், எங்களால் மீத்தேன் தயாரிக்க முடியும்.

திரவ ஆக்சிஜன் மற்றும் மீத்தேன் ஆகியவை சூரிய குடும்பத்தின் மூலம் வர்த்தகத்தை இயக்கும் உந்துவிசை என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் டிம் கிரைன்.

நோவா-சி என்ற விண்கலம் 130 கிலோ எடையைச் சுமந்து செல்லும் திறனுடையது. ஆனால், அதன் முதல் பயணத்தில் 80 கிலோ மட்டுமே சுமந்து செல்லும்.

நோவா-சி தன்னை நிரூபித்தவுடன், அதைவிடப் பெரிய விண்கலம் உருவாக்கப்படும் என்று கிரைன் கூறுகிறார். ஐந்து டன் எடையைச் சுமந்து செல்லும் விண்கலத்தை உருவாக்கும் திட்டம் ஒன்றை நிறுவனம் கொண்டுள்ளது.

ஆனால், அந்த லட்சியப் பணிகளுக்கு முன், முதல் ஏவுதல் திட்டமிடலுக்குச் செல்லவேண்டும்.

1972-ஆம் ஆண்டு அப்பல்லோ பயணங்களுக்குப் பிறகு ஓர் அமெரிக்க விண்கலம் நிலாவில் மென்மையாகத் தரையிறங்கவில்லை. (2009-ஆம் ஆண்டில் LCROSS திட்டம், மோதும் தாக்கத்தால் பொருட்கள் எகிறுவதை ஆய்வு செய்வதற்காக ஒரு வாகனத்தை நிலவில் வேண்டுமென்றே மோதியது.)

நோவா-சி 2022 முதல் காலாண்டில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் விண்வெளிக்குள் செல்ல வெடித்துக் கிளம்பும்போது அதை மாற்றமுடியும்.

அது சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு அந்த ராக்கெட்டில் இருந்து துண்டிக்கப்பட்டு, நான்கு நாட்கள் பயணமாக நிலவை நோக்கிச் செல்லும்.

அங்குச் சென்றதும் நோவா-சி சுமார் 24 மணிநேரத்திற்கு நிலவின் கீழ் சுற்றுப்பாதையில் நுழையும். பூமியை நோக்கியிருக்கும் நிலவின் இருண்ட எரிமலைக் கடல்களான மேரே செரினிடாடிஸ் (Mare Serenitatis) மற்றும் மேரே கிரிசியம் (Mare Crisium) இடையே மென்மையான டச் டவுனுக்கு அதன் முக்கிய இயந்திரத்தைப் பயன்படுத்தும்.

பாதுகாப்பாக தரை இறங்கியவுடன், அது நிலவுடைய நாளில் சுமார் 13.5 நாட்களுக்குச் செயல்பாட்டில் இருக்கும். அந்த நேரத்தில் நாசா மற்றும் வணிக பேலோடுகள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலைகளைத் தொடங்கிவிடும்.

சோதனைகள் மற்றும் சேகரிக்கப்பட்ட தரவுகளை, இண்டியூடிவ் மிஷின்ஸின் தரவு ரிலே சேவை மூலமாக பூமிக்கு அனுப்பப்படும்.

ஆற்றல் தீர்ந்தவுடன், அனைத்து செயல்பாடுகளும் நின்றுவிடும். அதன்பிறகு, நோவா-சி நிலவின் மேற்பரப்பில் நிரந்தரமாக நிரந்தரமாக இருந்துவிடும். இல்லையேல் எதிர்காலத்தில் ஏதேனும் விண்வெளி வீரர்கள் அதை மறுசுழற்சி செய்யும் வரை அங்கே இருக்கும்.

நிலவில் நோவா-ச் எதிர்கொள்ளும் தீவிர வெப்பநிலையை நிர்வகிப்பது மிகப்பெரிய பொறியியல் சவால்களில் ஒன்று. அங்கு வெப்பநிலை 140C (284F) வரை அதிகமாகவும் -170C (-275F)அளவுக்குக் குறைவாகவும் இருக்கும்.

"இது வெறும் விண்கலம் மற்றும் அதன் விமான கணினிகள் என்றால், அது ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும். ஆனால், இப்போது நாம் நம்முடைய பேலோடுகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்," என்று கிரைன் கூறுகிறார்.

நிலவின் தீவிர சூழலில்கூட சரக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க, வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

சிமியோன் பார்பர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளராக உள்ளார். மேலும் விண்வெளியில் கிரகங்கள் மற்றும் நிலவு உள்ளிட்ட பிறவற்றில் வேலை செய்யும் கருவிகளை உருவாக்குவதில் அவருடைய வாழ்வைச் செலவிட்டார்.

எக்ஸோஸ்பெரிக் மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் தான் அவருடைய தற்போதைய திட்டம். அது, ஆஸ்ட்ரோபோடிக் என்ற இண்டியூடிவ் மிஷின்ஸ் நிறுவனத்தின் போட்டியாளரின் முதல் பயணத்தில் விண்வெளிக்குச் செல்லும். அவருடைய சாதனம் லேண்டர் எனப்படும், நிலவில் தரையிறங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட விண்கலத்தைச் சுற்றியுள்ள நிலவின் வளிமண்டலத்தைப் பகுப்பாய்வு செய்யும்.

"நாம் ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைகிறோம் என்று நினைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

முன்னதாக, அவரைப் போன்ற விஞ்ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் ஒன்று அல்லது இரண்டு பெரிய விண்வெளிப் பயணங்களில் பணியாற்றியிருக்கலாம். ஆனால், நிலவுக்கு அடிக்கடிச் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் இப்போது இருக்கின்றன.

"இப்போது பல திட்டங்கள் இருக்கின்றன. இது உங்களுக்கு விரைவாக விஷயங்களைச் செய்யவும் சற்று ஆபத்தான விஷயங்களைச் செய்யவுமான வாய்ப்பைக் கொடுக்கிறது. அதோடு, அனைத்து வாய்ப்புகளை ஒரே இடத்தில் வைத்திருக்கவும் முடியாது. அதனால், தோல்வி பயத்திலிருந்து இது உங்களை விடுவிக்கிறது," என்று அவர் கூறினார்.

இண்டியூடிவ் மிஷின்ஸ் மற்றும் அதன் போட்டியாளர்களின் நிலா போக்குவரத்து கட்டமைப்புகௌம் நாசாவின் ஆர்டிமிஸ் போன்ற அரசின் தலைமையிலான திட்டங்களும் நிலவில் மனித செயல்பாடுகளின் புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருக்கும் என்று கிரைன் கூறுகிறார்.

"முதன்முறையாக நாங்கள் புதிதாக நிறைய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது போல் அன்றி, மின்னணுவியல், கணினிகள், உற்பத்தி மற்றும் கலப்பு பொருட்கள் என்று நிலைமையை மாற்றியமைத்த பல தொழில்நுட்பங்கள் எங்களிடம் உள்ளன."

"அடுத்த 20-30 ஆண்டுகளில், பொதுமக்கள் நிலவுக்கான பயணங்களுக்கு, விடுமுறை நாட்களுக்காகப் பணம் செலுத்துவதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

"எதிர்காலத்தைக் கணிப்பது கடினம். ஆகவே, அது நடக்காமலும் போகலாம். ஆனால், அது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்."

முனைவர் பார்பர் எச்சரிக்கையுடனான நம்பிக்கையோடு இருக்கிறார்.

நிலவு மனிதர்களுக்கு எவ்வளவு எதிரானதாக இருக்கும் என்பதை அவர் எடுத்துக்காட்டோடு சொல்கிறார்.

மிகப்பெரிய வெப்பநிலை வரம்பு மற்றும் சந்திர தூசி ஆகியவை நிர்வகிக்கப்படாவிட்டால், இயந்திரங்கள் மற்றும் மனித நுரையீரலைச் சேதப்படுத்தும். மேலும், எதிர்கால மனித ஆய்வுகள் ஏற்படுத்தும் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்திலும் அவர் ஆர்வமாக உள்ளார்.

ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் செல்வாரா?

"எனக்கு என் வீட்டில் உள்ள வசதிகள் பிடிக்கும். ஆனாலும் ஆம் செல்வேன். முடியாது என்று எப்படிச் சொல்லமுடியும்?"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Cargo Aelivery in Moon. Latest Nasa news in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X