'இந்தாம்மா ஏய்..' கோயில் கருவறையில் நுழைய முயன்ற மகாராணி தள்ளிவிடப்பட்ட கொடூரம்! இதுதான் சனாதனமா?
போபால்: மத்தியப் பிரதேசத்தில் தனது பிறந்த நாளில் வழிபாடு செய்ய கோயில் கருவறைக்குள் நுழைய முயன்ற அரச குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் ஜுகல் கிஷோர் கோயில் இருக்கிறது. இந்த கோயில் நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். கடந்த 1758ம் ஆண்டு முதல் 1778ம் ஆண்டு வரை இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்டது. பன்னாவின் நான்காவது பண்டேலா மன்னரான ராஜா ஹிந்துபத் சிங் என்பவர்தான் இந்த கோயிலை கட்டினார். அதேபோல இந்த கோயிலின் கர்ப்ப கிரஹத்தில் வைக்கப்பட்டுள்ள சிலை பிருந்தாவனத்திலிருந்து கொண்டு வரப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவான நேற்று இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பன்னா ராஜவம்சத்தை சேர்ந்தவர்களில் யாருக்கேனும் பிறந்தநாள் வந்தால் அந்நாளில் இக்கோயிலில் அவர்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று பன்னா அரச குடும்பத்தின் மகாராணியான ஜிதேஸ்வரிக்கு நேற்று பிறந்த நாள் வந்திருக்கிறது. எனவே அவர் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்திருக்கிறார். நேற்று கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா என்பதால் கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்திருக்கிறது.
இந்நிலையில் கோயில் கர்ப்ப கிரஹத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு ஆரத்தி எடுக்க வேண்டும் என்று மகாராணி முயன்றிருக்கிறார். எனவே அவர் கோயிலின் கர்ப்ப கிரஹத்திற்குள் நுழைய முயற்சித்தார். இது கோயில் அர்ச்சகர்களையும், சுற்றியிருந்தவர்களையும் கடுப்பாக்கியிருக்கிறது. மகாராணி காலை எடுத்து உள்ளே வைக்க வந்தபோது அவரது காலை அர்ச்சகர் ஒருவர் பிடித்துக்கொள்ள, கர்ப்ப கிரஹத்திற்கு வெளியே இருந்த மற்றொருவர் மகாராணியின் கையை பிடித்து வெளியே இழுத்திருக்கிறார்.
இதில் சம்பவ இடத்திலேயே மகாராணி நிலைத்தடுமாறி விழுந்திருக்கிறார். இதனையடுத்து அவர் எழுந்து கர்ப்ப கிரஹத்திற்குள் போய்விடக்கூடாது என்று அர்ச்சகரும், மற்றவர்களும் கவனமாக இருந்திருக்கின்றனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் மகாராணியை அப்புறப்படுத்தினர். முன்னதாக அவர் கர்ப்ப கிரஹத்திற்குள் நுழைய முயன்றபோது சுற்றியிருந்தவர்கள் "ஏய், ஏய்" என்று கூச்சலிட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் கொடுத்த புகார் காரணமாக மகாராணி மீது 295ஏ பிரிவின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. ஏற்கெனவே சனாதனத்திற்கு ஆதரவாக வட மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் பேசி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. மகாராணி கைம்பெண் (கணவரை இழந்தவர்) என்பதால்தான் அவர் கோயில் கர்ப்ப கிரஹத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
மற்றொருபுறம் மகாராணி குடித்திருந்தால்தான் கர்ப்ப கிரஹத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று கோயில் நிர்வாகத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications