41 தொழிலாளர்களை மீட்டது எப்படி? பிரதமரின் வழிக்காட்டுதலே காரணம் என புகழ்ந்த உத்தரகாண்ட் முதல்வர்
டேராடூன்: சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் தொழிலாளர்கள் மீட்புக்கு பிரதமர் மோடியின் வழிக்காட்டுதலே காரணம் என உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது கடந்த 12ம் தேதி திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி கொண்டனர்.

இதையடுத்து மீட்பு பணி தொடங்கியது. தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 17 நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
இந்நிலையில் தான் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கப்பதற்கான துளையிடும் பணி இன்றுடன் முடிவடைந்த நிலையில் மீட்பு படையினர் 41 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டனர். இரவு 8.40 மணியளவில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 17 நாட்களாக தொடர்ந்து 410 மணிநேரம் நடந்து வந்த மீட்பு பணி என்பது வெற்றி பெற்றுள்ளது
41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த குடும்பத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் தான் மீட்பு பணி வெற்றி பெற்றததை தொடர்ந்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். பிரதமர் மோடி தொடர்ந்து என்னுடன் தொடர்பில் இருந்தார். மீட்பு பணி குறித்த விஷயங்களை அடிக்கடி கேட்டறிந்தார். சுரங்கத்தில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்ற பணியை அவர் எனக்கு அளித்து இருந்தார்.
பிரதமரின் வழிக்காட்டுதல் மற்றும் ஆதரவு இல்லாவிட்டால் இந்த மீட்டு பணி வெற்றியடைந்து இருக்காது. மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் தான் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களையும் மீட்டு வெற்றி பெற்றுள்ளோம். தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்ட பிறகும் கூட அவர் என்னுடன் பேசினார். அப்போது மருத்துவ வசதி மற்றும் தொழிலாளர்களுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்'' என்றார்.
முன்னதாக உத்தரகாண்ட் முதல்வர் அலுவலகம் தரப்பில், ‛‛சுரங்கப்பாதையில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்ட உடன் அவர்களின் உடல்நலம், மருத்துவ வசதி மற்றும் அவர்களை குடும்பத்துடன் சேர்ப்பதற்கான ஏற்படும் நடவடிக்கை குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இதையடுத்து அனைத்து தொழிலாளர்களும் சினியாலிசூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும், அதன்பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
