'இளைஞரின் வயிற்றுக்குள் 63 ஒரு ரூபாய் நாணயங்கள்'. . மிரண்டுபோன டாக்டர். . ராஜஸ்தானில் சம்பவம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வலியால் துடித்த இளைஞரின் வயிற்றில் இருந்து 63 ஒரு ரூயாய் நாணயங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் இதைப்பார்த்து மிரண்டு போனார்.
ராஜஸ்தான் மநிலம் ஜோத்பூர் நகரில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனைக்கு கடந்த புதன்கிழமை இளைஞர் ஒருவர் கடுமையான வயிற்று வலி பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 2 தினங்களாக தாங்க முடியாத வயிற்று வலியால் மிகவும் அவதிப்படுவதாக இளைஞரின் குடும்பத்தினர் மருத்துவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தால் தான் என்ன பிரச்சினை என்று தெரியும் என்றனர்.

நாணயங்களை விழுங்கிய இளைஞர்
இதன்படி, இளைஞருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்கேன் முடிவுகளை ஆய்வு செய்த மருத்துவர்களுக்கு வயிறு முழுவதும் எதோ உலோக கட்டி போன்று தென்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் இதுபற்றி இளைஞரிடம் கேட்டனர். இதற்கு பதிலளித்த இளைஞர், மன உளைச்சலால் ஒரு 10 முதல் 15 ஒரு ரூபாய் நாணயங்களை விழுங்கி விட்டதாக கூறினார். இளைஞரின் பதிலை கேட்டு திகைத்து போன மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின்றி நாணயங்களை எடுத்து விடலாமா? என்பது குறித்து ஆலோசித்தனர். இதற்கு பிற மருத்துவர்களும் ஒப்புக்கொண்டதால் இளைஞரின் வயிற்றில் உள்ள நாணயங்கள் எண்டோஸ்கோபி முறையில் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, எண்டோஸ்கோபி முறையில், நாணயங்கள் எடுக்கப்பட்டன. இந்த சிகிச்சை இரண்டு நாள் வரை நீடித்தது.

63 நாணயங்கள் எடுக்கப்பட்டன
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "36-வயது இளைஞர் கடுமையான வயிற்றுவலி எனகூறி மருத்துவமனையில் சேர்ந்தார். அவருக்கு ஸ்கேன் செய்ததில் நாணயங்களை விழுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இளைஞருக்கு சிகிச்சையை மேற்கொண்டோம். இரண்டு நாட்கள் நீடித்த சிகிச்சைக்குப் பிறகு இளைஞரின் வயிற்றில் இருந்து 63 நாணயங்கள் எடுக்கப்பட்டன. இளைஞர் வெறும் 10 முதல் 15 நாணயங்களே விழுங்கியதாக கூறினார். ஆனால் உண்மையில் அவர் 63 நாணயங்களை விழுங்கி இருந்து இருக்கிறார். அனைத்தும் ஒரு ரூபாய் நாணயங்களாக இருந்தன.

வித்தியாசமானவற்றை உட்கொள்கிறார்
தற்போது இளைஞர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். மன உளைச்சலுடன் காணப்படும் அந்த இளைஞர் வித்தியாசமானவற்றை உட்கொள்ளும் மனநிலை கொண்டவராக உள்ளார். இதனால், அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்லுமாறு குடும்பத்தினரை கேட்டுக்கொண்டுள்ளோம்" என்றனர். மன உளைச்சலால் வித்தியாசமான பழக்கங்களை செய்யும் நபர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அலட்சியம் காட்டக்கூடாது
மருத்துவர்கள் இது பற்றி மேலும் கூறும் போது, 'குடும்பத்தினர் தங்கள் வீட்டில் உள்ள நபர்கள் மன உளைச்சலுடன் காணப்பட்டாலோ, அசாதாரணமாக நடந்து கொண்டாலோ அலட்சியமாக இருக்கக் கூடாது. அவர்களிடம் உடனடியாக பேசி, அவர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இதுவும் பலனளிக்காத பட்சத்தில் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். மருத்துவர் ஆலோசனை பெற்று உரிய சிகிச்சை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். உரிய நேரத்தில் இதை செய்யாவிட்டால், தொடர் மன உளைச்சல், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடும் மன நல பாதிப்பை ஏற்படுத்தும். இது உடல் நலனையும் பாதித்து பல்வேறு வியாதிகளுக்கும் வழிவகுக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.












Click it and Unblock the Notifications