டெல்லியில் திரளும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்.. ஆப்சென்ட் ஆகும் மம்தா பானர்ஜி.. இதுதான் காரணமாம்!
கொல்கத்தா: டெல்லியில் வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 7 ஆம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி 57 லோக்சபா தொகுதிகளில் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட நாடு முழுவதும் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் நாளன்று நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு, இந்தியா கூட்டணி ஆட்சியமைந்தால் பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தாவின் புர்ராபஜாரில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய மம்தா இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி கூறுகையில், "ஜூன் 1 ஆம் தேதி இந்தியா கூட்டணி கூட்டத்தை கூட்டியுள்ளனர். ஆனால் என்னால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று சொல்லிவிட்டேன். ஜூன் 1 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாப் மற்றும் உ.பி.யிலும் தேர்தல் நடைபெற உள்ளது. நாம் எப்படி இதை விட்டுவிட்டு செல்ல முடியும்.
மேற்கு வங்கத்தில் 7ஆம் கட்டத்தில் முக்கியமான தேர்தல் நடைபெற உள்ளது. கொல்கத்தா உள்பட ஒன்பது இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இது மேற்கு வங்கத்தில் இதுவரை பல கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவை விட அதிகம். 2019ல் இந்த ஒன்பது தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெற்றோம்.
மற்றொரு புறம் மேற்கு வங்கத்தை ரெமல் புயல் தாக்கியுள்ளது. இந்த நேரத்தில் டெல்லியில் கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் என் இதயம் பாதிக்கப்பட்ட மக்களுடன் உள்ளது. என்னுடைய முன்னுரிமை மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு தான். நாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். அவர்களுக்கு தங்குமிடம், உணவு கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஜூன் 1ஆம் தேஹி கொல்கத்தாவில் உள்ள இரண்டு தொகுதிகளான கொல்கத்தா தக்சின் மற்றும் கொல்கத்தா உத்தர் உட்பட மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் அன்றைய தினம் வாக்களிக்க உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் சீட் பகிர்வில் உடன்பாடு ஏற்படாத நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் சீட்களை பகிர முடியாது எனக் கூறி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார் மம்தா பானர்ஜி. எனவே, மேற்கு வங்கத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. எவ்வாறாயினும், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications