மோடி, அமித்ஷாவின் புதிய சாதனை.. இத யாரும் கண்டுக்கலயே! - திரிணாமூல் எம்.பி.யின் வஞ்சப் புகழ்ச்சி
கொல்கத்தா: மக்களவை துணை சபாயாகரை 1,096 நாட்களாக நியமனம் செய்யாமல் பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் புதிய சாதனை படைத்து இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி டெரிக் ஓ பிரையன் வாழ்த்தி இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியமைத்து 8 ஆண்டுகள் கடந்துள்ளதை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

2 முறை வென்ற பாஜக
2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியமைத்தது. அதன் பதவிகாலம் 5 ஆண்டுகளில் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்ற மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவில் ஆட்சியை தக்க வைத்தது.

துணை சபாநாயகர் தம்பிதுரை
2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தபின் சுமித்ரா மகாஜனை மக்களவை சபாநாயகராக நியமனம் செய்த பாஜக அரசு, 71 நாட்களுக்கு பின்னர் அதிமுக எம்பியாக இருந்த தம்பிதுரையை மக்களவை துணை சபாநாயகராக நியமித்தது. 2019 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமனம் செய்தது.

காலியாக இருக்கும் துணை சபாநாயகர் பதவி
ஆனால், 2 வது முறை பாஜக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளாகியும் மக்களவை துணை சபாநாயகரை மத்திய அரசு நியமிக்கவில்லை. சபாநாயகர் ஓம் பிர்லா இல்லாத சமயத்தில் மூத்த எம்.பிக்களே துணை சபாநாயகராக அவையை நடத்தி வருகின்றனர். இப்படிதான் 3 ஆண்டுகால ஆட்சியை கழித்து இருக்கிறது மத்திய பாஜக அரசு.

மோடி, அமித்ஷாவுக்கு வாழ்த்து
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், "நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள். நீங்கள் நாடாளுமன்றத்தில் மேலும் ஒரு புதிய சாதனையை படைத்து இருக்கிறீர்கள். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் மக்களவையில் துணை சபாநாயகர் நியமிக்கப்படவில்லை. இதில் என்ன மோசம் என்றால் உங்களிடம் பெரும்பான்மை இருந்தும் அதை நீங்கள் செய்யவில்லை.

முந்தைய அரசுகள்
முந்தைய அரசாங்கங்களுடன் முரண்பட்டு நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதைப் பாருங்கள்." என்று பதிவிட்டு உள்ள அவர், இதற்கு முந்தைய அரசுகள் மக்களவை துணை சபாயாகரை நியமிக்க எடுத்துக் கொண்ட கால அளவை பட்டியலிட்டு இருக்கிறார். அதில், "தற்போதைய 17 வது மக்களவையில் 1,096 நாட்களாகியும் துணை சபாநாயகர் நியமிக்கப்படவில்லை.

முன்னாள் துணை சபாநாயகர்கள் நியமனம்
16 வது மக்களவையில் 71 நாட்கள் கழித்து தம்பிதுறை நியமிக்கப்பட்டு உள்ளார். 15 வது மக்களவையில் கரிய முண்டா, 14 வது மக்களவையில் சரன்ஜித் சிங் அத்வால், 13 வது மக்களவையில் பி.எம்.சயீத் ஆகியோர் எட்டே நாட்களில் நியமிக்கப்பட்டு உள்ளனர். 12 வது மக்களவையில் பி.எம்.சயீத் 270 நாட்கள் கழித்தும், 11 வது மக்களவையில் சூரஜ் பான் 52 நாட்களிலும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications