காவிரி மேலாண்மை வாரியம்: அமித்ஷாவுடன் தமிழக பாஜக தலைவர்கள் நாளை சந்திப்பு
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷாவை தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் நாளை சந்திக்க உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை முதலில் மத்திய பாஜக அரசு ஏற்றுக் கொண்டது.

ஆனால் திடீரென மேலாண்மை வாரியம் அமைக்க பாஜக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தமிழகத்துக்கு செய்யப்பட்ட அப்பட்டமான துரோகம் என்பதால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதனால் பாஜக மீது தமிழகத்தில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இது தமிழக பாஜக தலைவர்களுக்கு கடும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர்களான மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ராஜ்யசபா எம்.பி. இல. கணேசன், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் டெல்லி விரைந்துள்ளனர். டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை நாளை பிற்பகல் தமிழக பாஜக தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.
அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் இவர்கள் வலியுறுத்த உள்ளனர்.


Click it and Unblock the Notifications
