பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டக்கூடாது.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
டெல்லி: பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பு அணைகள் கட்டுவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
பாம்பாறு மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்ட முயற்சி எடுத்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவில் மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கினார். அவர் கூறுகையில், பவானி சாகருக்கு வருகின்ற நீர்வழி தடத்தையும், அமராவதியில் அந்த அணைக்கு வருகின்ற நீர்வழி தடத்தையும் தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படுவதாக சட்டசபை உறுப்பினர்கள் தங்களுடைய கவலையினை தெரிவித்து இருக்கிறார்கள். அந்த பகுதியில் இருக்கின்ற விவசாய மக்களும் தங்களுடைய கவலையை இங்கே தெரிவித்து இருக்கிறார்கள். ஆகவே, அரசு எடுத்த நடவடிக்கை பற்றி நான் இங்கே குறிப்பிட்டு கூறுவதற்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.
தற்போது பாம்பாற்றின் குறுக்கே பட்டிசேரியில் அணைக்கட்டும் பணிகளை கேரளா தொடங்கி உள்ளதாக பெறப்பட்ட செய்தியின் அடிப்படையில், நான் பிரதமருக்கு இப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கேரள அரசிற்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொண்டு ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன்.
மேலும், தமிழ்நாட்டின் முன்அனுமதி பெறாமல் எந்தவொரு திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது எனவும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்படும் வரையிலும் மற்றும் வழக்குகள் இறுதியாக்கம் பெறும் வரையிலும் கேரள அரசு எந்தவொரு திட்டத்தையும், பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளேன்.
ஏற்கனவே, பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்ட எடுக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்தக்கோரி பிரதமருக்கு கடந்த ஜனவரி 24ம்தேதி நான் கடிதம் எழுதியுள்ளேன். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசால் சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக்கோரி ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
முதல்வர் கூறியதை போலவே கேரள அரசின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.












Click it and Unblock the Notifications