மேற்கு வங்கம்.. தட்டித் தூக்கப்போகிறார் மம்தா பானர்ஜி.. பாஜகவுக்கு இவ்வளவு சீட்தான்.. அதிரடி சர்வே
கொல்கத்தா: "அடிபட்ட புலிக்கு தான் ஆவேசம் அதிகம்.." என்று சொன்னார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
அந்த வார்த்தையை மிகவும் உண்மையானது என்று சொல்வதை போல இருக்கிறது ஏபிபி செய்தி சேனல் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு.
ஏபிபி செய்தி சேனல் மட்டும் சி வோட்டர் இணைந்து நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இதில் மேற்கு வங்க தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள சர்வே.. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சி தருவதாகவும், பாஜகவுக்கு ஏமாற்றம் தருவதாகவும் இருக்கிறது.

18 தொகுதிகளில் வெற்றி
கடந்த லோக்சபா தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாஜக. இடதுசாரிகள் நீண்ட காலம் ஆட்சி செய்த மாநிலம் அது. பிறகு மமதா பானர்ஜி கோட்டையில் கொடி நாட்ட தொடங்கினார். இப்படி இரு துருவ அரசியல் நடைபெறும் மேற்கு வங்காளத்தில் சம்பந்தமே இல்லாமல் பாஜக சரசரவென்று வளர்ச்சி அடைந்து வருவது லோக்சபா தேர்தலின் போது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டது.

காரசார மோதல்
இதனால் தான் இந்த சட்டசபை தேர்தலின்போது எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்று மிகத் தீவிரமாக களமிறங்கியுள்ளது பாஜக. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில முக்கிய தலைவர்களை பாஜக தங்கள் பக்கம் இழுப்பதில் வெற்றி கண்டது. தொடர்ந்து, முதல்வர் மமதா பானர்ஜியுடன், பாஜக தலைவர்கள் காரசார மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ்
இப்படியான ஒரு அனல் பறக்க கூடிய அரசியல் சூழ்நிலை இருக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் ஏபிபி சி-வோட்டர் நடத்திய சர்வே, தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 43 சதவீத மக்கள் மறுபடியும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று அடித்துச் சொல்லி இருக்கிறார்கள்.

தொகுதிகள்
திரிணாமுல் காங்கிரஸ் 150 முதல் 166 சீட்கள் வரை வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறி மம்தா பானர்ஜி வயிற்றில் பால் வார்த்தது இந்த சர்வே. அதேநேரம் பாஜகவும் லேசுப்பட்ட போட்டியை தரப் போவது கிடையாது. போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது. அந்த கட்சி 98 முதல் 114 தொகுதிகள் வரை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சர்வே கூறுகிறது. ஆனாலும் ஆட்சியை பிடிக்க முடியும் என நம்பிய பாஜகவுக்கு இது ஏமாற்றம்தான்.

கவுரவ போட்டி
ஒரு காலத்தில் தொடர்ந்து ஆட்சி செய்த இடதுசாரிகள் மற்றும் அதோடு இணைந்து உள்ள காங்கிரஸ் கூட்டணி வெறும் 23 முதல் 31 தொகுதிகள் வரை தான் வெற்றி பெற முடியும். பிறர் மூன்று முதல் ஐந்து தொகுதிகள் வரை வெல்லக் கூடும். எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று கௌரவப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டிருக்கிறது பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ். குறிப்பாக மம்தா பானர்ஜி மற்றும் அமித்ஷா இருவரும் இந்தத் தேர்தலுக்கா இரவும் பகலும் உழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் வெளியாகி உள்ள சர்வே முடிவுகள் மம்தா பானர்ஜிக்கு மகிழ்ச்சியை தந்துள்ளன.












Click it and Unblock the Notifications