திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி.. கடும் சண்டை செய்த டிஎம்பி 2வது இடம்.. இடதுசாரிகள் 3ம் இடம்
அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 30 இடங்களில் வென்று 2 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. டிஎம்பி கட்சி 13 இடங்களில் வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களில் வென்று 3வது இடத்தையே பிடித்தது. 58 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதி இரண்டிலும் பாஜகவே வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரிபுராவில் வாக்குப்பதிவு நடந்த மொத்தம் உள்ள 60 இடங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி 45 இடங்களில் வெல்லும் என்றும், டிஎம்பி கட்சி இரண்டாவது இடத்தையும், இடதுசாரிகள் மூன்றாவது இடத்தையும் தான் பிடிப்பார்கள் என கூறப்பட்டது.
திரிபுரா சட்டப்பேரவையில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இங்கு 25 ஆண்டுகளாக சி.பி.எம் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவந்தது. கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காதவிதமாக பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றது. வெறும் 5 சதவீதம் மட்டுமே வாக்கு வங்கி வைத்திருந்த பாஜகவில், காங்கிரஸ் கட்சியினர் மொத்தமாக பாஜகவில் இணைந்ததால் அதிரடியாக பாஜக மிகப்பெரிய பலம் வாய்ந்த கட்சியாக மாறியது இதனால் அப்போது மொத்தமிருக்கும் 60 தொகுதிகளுக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க 51 இடங்களிலும், ஐ.பி.எஃப்.டி 9 இடங்களிலும் போட்டியிட்டன.

பழங்குடியினர்
இடது முன்னணிக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஃபார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தலா ஓர் இடத்திலும் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி 59 இடங்களில் தனித்துப்போட்டியிட்டது. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராதவிதமாக பா.ஜ.க 36 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் 18 தொகுதிகள் பழங்குடியினரின் தொகுதிகள் ஆகும்.

எப்படி இருந்தது
2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. எனினும், வாக்கு வித்தியாசம் பாஜக கூட்டணிக்கும் இடது முன்னணி கூட்டணிக்கும் இடையேயான பெரிய அளவில் இல்லை. இந்த இரு கூட்டணிகளுக்குமிடையே 5 தொகுதிகளில் 1,000 வாக்குகளுக்கும் குறைவாகவும், 29 தொகுதிகளில் 5,000 வாக்குகளுக்கும் குறைவாகவே வாக்கு வித்தியாசம் இருந்தது.

களம் இறங்கின
தனது கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணியுடன் (ஐ.பி.எஃப்.டி) இணைந்து பாஜக கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது. தற்போது திரிபுராவில் மாணிக் சகா பாஜக சார்பில் முதல்வராக உள்ளார். இந்நிலையில் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க 55 தொகுதிகளிலும், ஐ.பி.எஃப்.டி 5 தொகுதிகளிலும் களம் இறங்கின. இடது முன்னணி-காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ராம் நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு இடது முன்னணி தனது ஆதரவைத் தெரிவித்தது. இதனிடையே பழங்குடியினரிடையே மிகப்பிரலமான திப்ராமோத்தா கட்சி 42 இடங்களில் போட்டியிட்டது.

கணிப்புகள்
திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 16-ந் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டது.

பாஜக அதிக இடம்
அதன்படியே திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 30 இடங்களில் வென்றுள்ளது. இரண்டுஇடங்களில் முன்னிலை வகிக்றது. திப்ரா மோத்தா கட்சி 13 இடங்களில் வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடத்திலும் வென்றுள்ளது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 58 இடங்களுக்கு வெற்றி நிலவரம் வெளியாகி விட்டது. 2 இடங்களுக்கு முடிவுகள் வர வேண்டும். அந்த இரண்டிலும் பாஜகவே முன்னிலையில் உள்ளது.












Click it and Unblock the Notifications