உடல்நலக்குறைவை காரணம் காட்டி ஜாமின் கேட்ட டிடிவி.தினகரன்!
உடல்நலக்குறைவை காரணம் காட்டி டிடிவி தினகரன் டெல்லியில் உள்ள திஸ் ஹசரி கோர்ட்டில் ஜாமின் கோரினார்.
டெல்லி: உடல்நலக்குறைவை காரணம் காட்டி டிடிவி தினகரன் டெல்லியில் உள்ள திஸ் ஹசரி கோர்ட்டில் ஜாமீன் கோரினார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்து விட்டது.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பான வழக்கில் டிடிவி தினகரனிடம் நான்கு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 4வது நாள் விசாரணையின் முடிவில் தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகிய இருவரும் நேற்று நள்ளிரவு, டில்லி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

விசாரணை நடந்த இடத்திலிருந்த காவல்நிலைய சிறையிலேயே தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் அடைத்து வைக்கப்பட்டனர். இன்று அவர் டில்லியில் உள்ள திஸ் ஹசரி கோர்ட்டில் நீதிபதி பூனம் சவுத்ரி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
தினகரனுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தினகரனுக்கு ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். சம்மன் அனுப்பிய உடன் ஆஜரானதால் ஜாமின் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
உறவினர் இறந்த நிலையிலும் எந்த விலக்கும் கேட்காகமல் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தனது உடல்நிலையை காரணம் காட்டி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. சதித்திட்டத்தில் தான் சிக்க வைக்கப்பட்டிருப்பதாகவும் டிடிவி தினகரன் தனது ஜாமின் மனுவில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் அவருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது மேலும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications