தேர்தல் ஆணையத்துக்கு ரூ. 50 கோடி லஞ்சம்.. சிக்குகிறார் ஈரோடு மணல் கான்ட்ராக்டர்
ரூ. 50 கோடி பேர விவகாரம் தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த மணல் கான்ட்ராக்டரை பிடிக்க அமலாக்கத் துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.
டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு ரூ. 50 கோடி லஞ்சம் தந்த விவகாரம் தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த மணல் கான்ட்ராக்டரை பிடிக்க அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திராவும், தினகரனும், பணபரிவர்த்தனை விவகாரத்தை கவனித்து வந்த மல்லிகார்ஜுனாவையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
சுகேஷிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் மற்ற இருவரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து வந்து சென்னையில் விசாரணை நடத்தினர்.

சென்னையில் முக்கிய இடங்கள்
தினகரனின் வீடு, சென்னை கொளப்பாக்கம், ஆதம்பாக்கம், பெரம்பூர், சவுகார்பேட்டை, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி 16 பேருக்கு சம்மன் அளித்தனர். மேலும் தினகரனின் மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
போலீஸ் கஸ்டடிக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அவர்கள் இருவரையும் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற நீதிபதி பூனம் சௌத்ரி முன்பு கடந்த 1-ஆம் தேதி ஆஜர்படுத்தினர். அவரது உத்தரவின் பேரில் டிடிவி தினகரனை திகார் சிறையில் போலீஸார் அடைத்தனர்.

அமலாக்கத் துறை
இந்நிலையில் இந்த வழக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்புடையது என்பதால் அதன் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவுள்ளனர். இதனால் தினகரனுக்கும் , அவருக்கு உதவியவர்களுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. ரூ.50 கோடியை அசால்ட்டாக ஏற்பாடு செய்வதாக கூறிய திருச்சி தொழிலதிபர் சிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஈரோடு கான்ட்ராக்டர்
இந்தநிலையில் ரூ.50 கோடி பேர விவகாரம் ஈரோட்டை சேர்ந்த மணல் கான்ட்ராக்டர் ஒருவர் முன்னிலையில் பேசப்பட்டதாகவும், அவரை தினகரனுக்கு அறிமுகப்படுத்திய முன்னாள் அமைச்சர் குறித்தும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர். இன்னும் எத்தனை பேர் சிக்குவார்களோ என்ற தெரியவில்லை.












Click it and Unblock the Notifications