161 'கன்னி' எம்.பிக்களுக்கு 2 நாள் பாடம் நடத்துகிறது பாஜக
டெல்லி: நாடாளுமன்றத்தில் எப்படி செயலாற்ற வேண்டும் என்பது குறித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.பிக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதை இன்று பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்.
நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 161 பேர் முதல்முறை வெற்றி பெற்ற எம்.பிக்கள். இவர்களுக்கு நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றும் அதில் அவர்களின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து வகுப்பெடுக்க பாஜக முடிவு செய்தது.

டெல்லி-ஹரியானா நடுவேயுள்ள சுரஜ்கண்ட் என்ற இடத்தில் இதற்காக பயிற்சி வகுப்பு இன்று காலை துவங்கியது. இதை பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்து வரவேற்புரையாற்றினார். குஜராத் சட்டசபை உறுப்பினராக தொடர்ந்து பதவி வகித்துவந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் மோடி கால்பதிப்பதும் இதுதான் முதன்முறை.
மோடியை தொடர்ந்து, பாஜக மூத்த நாடாளுமன்றவாதிகள் முதல்முறை எம்.பிக்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்கள். 'வாக்காளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது எப்படி?' என்கிற தலைப்பில், மத்திய அமைச்சர் வெங்கய்யாநாயுடு பேசுகிறார்.
'நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை மற்றும் உரிமைகள்' குறித்து மற்றொரு மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி உரையாற்றுகிறார். 'நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை காப்பது எப்படி?' என்பது குறித்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜும், 'சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மக்களுக்கு நெருக்கமாவது எப்படி?' என்பது குறித்து மின்துறை அமைச்சர் பியூஷ் கோயலும் பேசுகிறார்கள்.
86 வயதான பாஜகவின் தற்போதைய பிதாமகன், எல்.கே.அத்வானி, நிறைவு உரையாற்றுகிறார்.












Click it and Unblock the Notifications