மும்பை தியேட்டரில் தேசிய கீதத்தை அவமதித்து திமிராக பேசிய 2 பெண்கள் மீது வழக்கு
மும்பை: மும்பையில் உள்ள தியேட்டர் ஒன்றில் தேசிய கீதம் ஒலிபரப்பியபோது எழுந்து நின்று மரியாதை செய்யாத இரண்டு பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள இன்பினிட்டி மாலுக்கு தனது தோழி ஜோதி பட்டுடன் படம் பார்க்க சென்றுள்ளார் சமூக ஆர்வலரான ஷீத்தல் மாத்ரே. மகாராஷ்டிரா மாநில தியேட்டர்களில் படம் துவங்கும் முன்பு கண்டிப்பாக தேசிய கீதம் ஒலிபரப்பப்பட வேண்டும்.

அதே போன்று அன்றும் தியேட்டரில் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டுள்ளது. அப்போது இரண்டு பெண்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து மரியாதை செய்யவில்லை. இதை பார்த்த ஷீத்தல் அவர்களிடம் சென்று தேசிய கீதத்திற்கு எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட அந்த பெண்களோ ஷீத்தலை கண்டபடி திட்டியதுடன், அடித்துவிடுவோம் ஓடிப் போய்விடு என்று மிரட்டியுள்ளனர். உடனே ஷீத்தல் இது பற்றி அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் அந்த 2 பெண்கள் மீது தேசிய கீதம் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு மும்பையில் உள்ள தியேட்டர் ஒன்றில் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்று மரியாதை செய்யாத ஒரு குடும்பம் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications