ஒய்எஸ்ஆர்எஸ் ராஜ்யசபா எம்பிக்கள் இருவர் ராஜினாமா.. தெலுங்கு தேசம் கட்சியில் சேர உள்ளதாக தகவல்
அமராவதி: ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து, இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருக்கின்றனர். ஏற்கெனவே தேர்தல் தோல்வியால் துவண்டு போயிருக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு, இது கடும் பின்னடைவாக அமைந்துள்ளது. ராஜினாமா செய்தவர்கள் விரைவில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆந்திர பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்திருந்தது. குறிப்பாக சட்டப்பேரவை தேர்தலில் இக்கட்சி ஆட்சியை இழந்திருந்தது. இப்படி இருக்கையில் தற்போது இக்கட்சியிலிருந்து இரண்டு ராஜ்யசபா எம்பிக்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

மோபிதேவி வெங்கடரமணா மற்றும் பேடா மஸ்தான் ராவ் என இரண்டு எம்பிக்கள், ஜக்தீப் தன்கரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்திருப்பதாகவும், அக்கடிதத்தை தன்கர் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் வெங்கடரமணாவின் பதவிக்காலம் 2026ம் ஆண்டுதான் முடிவடைவதாக இருந்தது. அதேபோல, மஸ்தான் ராவ் பதவிக்காலம் 2028ம் ஆண்டு ஜூன் மாதம் முடிவடைய இருந்தது. இருப்பினும் இருவரும் தற்போது ராஜினாமா செய்திருக்கின்றனர். இருவரும் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவ இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவர்களில் மஸ்தான் ராவ் ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சியில்தான் இருந்தார். ஆந்திராவின் கவாலி தொகுதியின் எம்எல்ஏவாக கடந்த 2009 முதல் 2014 பதவி வகித்து வந்தார். பின்னர் அவர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். வெங்கடரமணா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராவார். இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்த இவர், மாநில அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். அதன் பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார்.
இந்த ராஜினாமா காரணமாக, ராஜ்ய சபாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்களின் எண்ணிக்கை 9ஆக சுருங்கிவிடும். மறுபுறம் சந்திரபாபு நாயுடுவுக்கு இது ஹாப்பி நியூஸ். ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டிலிருந்து தற்போது வரை தெலுங்கு தேசம் கட்சிக்கு ராஜ்யசபா எம்பிக்கள் இல்லாமல் இருந்தனர். இந்த இரண்டு பேர் புதியதாக பதவியேற்றால், இந்த குறை தீர்க்கப்படும். அதேபோல இக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்திருப்பதால், பாஜகவின் பலமும் ராஜ்ய சபாவில் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications